'மெல்போர்னில் எனது பந்து வீச்சை எதிர்கொள்வது கடினம்' - இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் பவுலர் ரவுப் எச்சரிக்கை
|இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பாகிஸ்தான் பவுலர் ரவுப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
லாகூர்,
விரைவில் தொடங்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மெல்போர்னில் வருகிற 23-ந்தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் அளித்த ஒரு பேட்டியில், 'பாகிஸ்தான்- இந்தியா மோதல் எப்போதுமே உச்சகட்ட நெருக்கடி நிறைந்த போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் எனது சிறந்த திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் எனது பந்துவீச்சை இந்திய பேட்ஸ்மேன்கள் சமாளிப்பது எளிதாக இருக்காது. இந்த ஆட்டம் மெல்போர்னில் நடப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
ஏனெனில் பிக்பாஷ் கிரிக்கெட்டில் மெல்போர்ன் தான் எனக்கு சொந்த ஊர் மைதானம். நான் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடுகிறேன். இங்குள்ள ஆடுகளத்தன்மையில் எப்படி பந்து வீச வேண்டும் என்பது எனக்கு தெரியும். இந்தியாவுக்கு எதிராக எந்த மாதிரி பந்துவீச வேண்டும் என்ற திட்டமிடலை ஏற்கனவே தொடங்கி விட்டேன்' என்றார்.
28 வயதான ஹாரிஸ் ரவுப் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 46 ஆட்டங்களில் ஆடி 58 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார். அண்மையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக இரு ஆட்டங்களில் ஆடி ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார் என்பது நினைவு கூரத்தக்கது.