< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்தார்களா..?  - டெஸ்ட் கேப்டன் பதில்
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் வீரர்கள் மேட்ச் பிக்சிங் செய்தார்களா..? - டெஸ்ட் கேப்டன் பதில்

தினத்தந்தி
|
12 Aug 2024 6:32 AM IST

டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதே தங்களுடைய இலக்கு என்று ஷான் மசூத் கூறியுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களாகவே தொடர்ச்சியாக வெற்றிகளை பெறுவதற்கு தடுமாறி வருகிறது. சமீப காலங்களில் பாகிஸ்தான் கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியை சந்தித்து வருகிறது. எடுத்துக்காட்டாக 2022 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தானிடம் முதல் முறையாக தோல்வியை பதிவு செய்தது.

அந்த வரிசையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோற்றது. மேலும் பரம எதிரியான இந்தியாவுக்கு எதிரான குறைந்த இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் எளிதில் வெல்லும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் அந்த போட்டியிலும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதனால் பாகிஸ்தான் வீரர்கள் பிக்ஸிங் செய்து தோல்வியை சந்தித்தார்களா என்ற பேச்சுக்கள் அந்த சமயத்தில் காணப்பட்டன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய வீரர்கள் யாரும் பிக்சிங் செய்யவில்லை என பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார். அத்துடன் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவதே தங்களுடைய இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியது பின்வருமாறு:-"மேட்ச் பிக்சிங் என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்திய காரணத்தால் எங்கள் வீரர்களின் நோக்கத்தை என்னால் கேள்வி கேட்க முடியாது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தற்போதைய அமைப்பில் அவர்களின் நேர்மையை யாரும் கேள்வி கேட்க முடியாது என்று நினைக்கிறேன். இது எனக்கு சற்றும் உடன்படாத ஒன்று. உலகக்கோப்பை முடிந்து போன ஒன்றாகும். எனவே அடுத்து வரும் போட்டிகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டும்.

எங்களின் அனைத்து வீரர்களும் பாகிஸ்தானுக்காக வெற்றி பெற விரும்புகிறார்கள் என்பதற்கு என்னால் உத்தரவாதம் கொடுக்க முடியும். அதில் வெற்றி தோல்விகள் உள்ளன. நாங்கள் தோற்கும் போதெல்லாம் மிகவும் சோகமாக இருக்கிறோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இன்னும் நிறைய விளையாட வேண்டும். குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெறும் 7 டெஸ்ட் போட்டிகளை முழுமையாக பயன்படுத்த முயற்சிப்போம். அதே சமயம் புள்ளிகளை பெற தென் ஆப்பிரிக்காவிலும் தொடரை வெல்வது சிறந்த வாய்ப்பாகும்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்