அயர்லாந்துக்கு எதிரான டி20-ல் புவனேஸ்வர் குமார் உண்மையாகவே 201 கி.மீ வேகத்தில் பந்து வீசினாரா..?
|அயர்லாந்துக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் புவனேஸ்வர் குமார் 201 கி.மீ வேகத்தில் பந்துவீசினார் என்ற செய்தி டுவீட்டரில் வைரலானது.
டப்ளின்,
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
மழை காரணமாக போட்டி 12 ஒவர்களாக குறைக்கப்பட்டு நடைபெற்றது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 108 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 9.2 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணியின் முதல் ஓவரை வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வீசினார். ஓவரின் முதல் பந்தை ஸ்டிர்லிங் எதிர்கொண்டார், அந்த பந்தானது 201 கிமீ வேகத்தில் பந்து வீசப்பட்டதாக திரையில் காண்பிக்கப்பட்டு அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
பந்துவீச்சின் வேகத்தை கணிக்கும் ஸ்பீட் கன் பிழை செய்ததன் காரணமாக இது நிகழ்ந்தாலும், இதனை நெட்டிசன்கள் விடுவதாக இல்லை. அவர்கள் சமூக வலைதலங்களில் புவனேஸ்வர் குமார் 201 கி.மீ. பந்து வீசியதாக பதிவிட்டு இணையத்தில் வைரலாக்கினர்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய நபராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் உள்ளார். அவர் மணிக்கு 161.3 கி.மீ. வேகத்தில் பந்து வீசியதே இது வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்துவீச்சாக உள்ளது.