இவர்தான் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம் - இளம் வீரரை பாராட்டிய ரவி சாஸ்திரி
|துருவ் ஜூரல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம் என்று ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
மும்பை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் தீபக் ஹூடாவின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் குவித்தது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ, சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரலின் அரைசதத்தின் மூலம் 19 ஓவர்களில் இலக்கை கடந்து வெற்றி பெற்றது.
முன்னதாக கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் கிடைத்த வாய்ப்பில் அசத்திய துருவ் ஜூரல் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் ராஞ்சியில் நடைபெற்ற 4-வது போட்டியில் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை அற்புதமாக விளையாடி காப்பாற்றிய அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதேபோல கடைசி போட்டியிலும் சிறப்பாக விளையாடிய அவர் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதற்கு உதவினார்.
அதன் காரணமாக அடுத்த எம்.எஸ். தோனியாக உருவாகும் வழியில் ஜூரல் இருப்பதாக ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியிருந்தார். அதே பார்மில் தற்போது நடப்பு ஐ.பி.எல். தொடரிலும் அசத்தும் துருவ் ஜூரல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்கம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "இந்த ஜூரல் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த தங்க நகை. தற்போது அவர் சிறப்பான வருங்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். சீரியஸ் நண்பா" என்று பதிவிட்டுள்ளார்.