< Back
கிரிக்கெட்
சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார் - கே.எஸ்.விஸ்வநாதன் பேட்டி
கிரிக்கெட்

'சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார்' - கே.எஸ்.விஸ்வநாதன் பேட்டி

தினத்தந்தி
|
15 Nov 2022 11:44 PM GMT

சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறினார்.

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்கி இரண்டரை மாதங்கள் நடக்க இருக்கிறது. இதற்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந்தேதி கொச்சியில் நடக்கிறது. இதையொட்டி தக்க வைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் (நேற்று) சமர்பிக்கும்படி ஒவ்வொரு அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கெடு விதித்திருந்தது.

இதன்படி சமர்பிக்கப்பட்ட அந்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது அதிகபட்சமாக கொல்கத்தா நைட் நைடர்ஸ் 16 வீரர்களையும், மும்பை இந்தியன்ஸ் 13 வீரர்களையும் விடுவித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன் ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதில் உத்தப்பா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். 39 வயதான ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோவின் (ரூ.4.4 கோடி) பந்து வீச்சு மற்றும் பேட்டிங் முன்பு போல் இல்லாததால் அணி நிர்வாகம் அவரை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இதன் மூலம் சென்னை அணியுடனான பிராவோவின் 11 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டனாக டோனி நீடிப்பார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறும் போது, வீரர்களை விடுவித்தது கடினமான முடிவு. சென்னை அணிக்காக அவர்கள் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவர்களில் யாரையாவது ஏலத்தில் மீண்டும் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வோம்.

2023-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியை டோனி வழிநடத்துவார். அவர் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அணியும் நன்றாக செயல்படும்' என்று குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்