கடைசி ஓவரில் தோனி அப்படி செய்திருக்க கூடாது.. இர்பான் பதான் கண்டனம்
|பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் தோனி, ரன்களை ஓடி எடுக்க மறுத்தார்.
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த பஞ்சாப் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி முதலில் பேட் செய்த போது, கடைசி ஓவரின் 3-வது பந்தை தோனி 'டீப் கவர்' திசையில் அடித்து விட்டு ஓட மறுத்தார். அதற்குள் எதிர்முனையில் நின்ற டேரில் மிட்செல், தோனி பக்கம் கிரீசை தொட்டு விட்டு, பிறகு அவர் வேண்டாம் என்றதால் மறுமுனைக்கும் ஓடிவந்ததுடன், ரன்-அவுட்டில் இருந்து தப்பினார்.
அதாவது தோனி உடனடியாக ஓடியிருந்தால் இரண்டு ரன் கிடைத்திருக்கும். இந்த வீடியோ காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. தோனி ஏன் இப்படி செய்தார் என்றும், அவரது செயல் சுயநலமானது என்று ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவிக்கையில், 'அந்த பந்தில் தோனி ரன் எடுக்க மறுத்திருக்கக் கூடாது. கிரிக்கெட் ஒரு குழு விளையாட்டு. அதில் இந்த மாதிரி செய்யக்கூடாது. அது மட்டுமின்றி எதிர்முனையில் நின்ற டேரில் மிட்செல் சர்வதேச வீரர். ஒரு வேளை அவர் பவுலராக இருந்திருந்தால் பேட்ஸ்மேனின் நிலைமையை நிச்சயம் என்னால் புரிந்து கொண்டிருக்க முடியும்' என்றார். இந்த ஆட்டத்தில் தோனி 14 ரன்னில், ரன்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.