நேற்றைய போட்டியில் தோனி முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு கருத்து
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னை தோல்வியை தழுவியது.
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இதில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமேஅடித்தது. பின்னர் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன் ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 166 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது சென்னை அணி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமே மோசமான பேட்டிங்தான் என்று பேசப்படுகிறது. ஏனெனில் ஒரு கட்டத்தில் சென்னை அணி 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 84 ரன்கள் அடித்து வலுவாக இருந்தது. ஆனால் போட்டியின் இரண்டாம் பாதியில் சென்னை அணியின் வீரர்களால் அதிரடியாக விளையாட முடியாமல் போனதால் ரன் குவிக்க முடியவில்லை.
அதிலும் குறிப்பாக சி.எஸ்.கே அணியின் பேட்ஸ்மேன்கள் கடைசி 5 ஓவர்களில் பவுண்டரிகளை அடிக்க போராடினர். அதோடு தோனியும் கடைசி நேரத்தில் களத்திற்கு வந்து 1 ரன் மட்டுமே அடித்தார். இப்படி சென்னை அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தோனி முன்கூட்டியே களமிறங்கியிருக்க வேண்டும் என சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: 'தோனி இந்த போட்டியில் முன்கூட்டியே களத்திற்கு வந்திருக்க வேண்டும். ஏனெனில் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் இந்த மைதானத்தில் பவுண்டரிகளை அடிக்க திணறிய வேளையில் 18-வது ஓவரிலேயே தோனி வந்து இருந்தால் தனது அனுபவத்தின் மூலம் நிச்சயம் அதிகமான பவுண்டரிகளை அடித்திருக்க முடியும்' என்று கூறினார்.