தோனியா? ரிஸ்வானா? - பாகிஸ்தான் ரசிகரின் கேள்விக்கு காட்டமாக பதில் அளித்த ஹர்பஜன் சிங்
|தோனியா? ரிஸ்வானா? இவர்களில் யார் சிறந்தவர் என்பதை நேர்மையாக சொல்லுங்கள் என்று பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையில் இந்திய அணி 3 விதமான ஐ.சி.சி கோப்பைகளை (50 ஓவர் உலகக்கோப்பை, 20 ஓவர் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) வென்றுள்ளது. மேலும், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராகவும் தோனி திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ரசிகர் ஒருவர், அவரது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தோனியா? ரிஸ்வானா? இவர்களில் யார் சிறந்தவர் என்பதை நேர்மையாக சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது கேள்விக்கு ரசிகர்கள் பலரும் பதில் அளித்து வரும் சூழலில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன்சிங் ஆவேசம் அடைந்துள்ளார். அவர் எக்ஸ் வலைத்தளபக்கத்தில் அந்த ரசிகரை டேக் செய்து காட்டமான ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில்,
இது ஒரு முட்டாள்தனமான கேள்வி. ரிஸ்வானை விட தோனி முன்னோக்கி உள்ளார். இந்தக் கேள்வியை ரிஸ்வான் இடம் கேட்டால் கூட அவரே உண்மையான பதிலை சொல்லி விடுவார். எனக்கு ரிஸ்வானை பிடிக்கும். அவர் நல்ல வீரர். அவர் எப்போதும் சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால், இந்த ஒப்பீடு தவறானது. இன்றும் உலக கிரிக்கெட்டில் தோனி நம்பர் 1 வீரர். ஸ்டம்பிற்கு பின்னால் அவரை விட சிறந்தவர்கள் யாருமே கிடையாது என பதிவிட்டுள்ளார்.