வீரர்களை சரியாக பயன்படுத்துவதில் டோனி கில்லாடி- பத்ரிநாத்
|அணியின் வெற்றிக்கு வீரர்களை சரியாக பயன்படுத்துவதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கில்லாடி என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்தார்.
சென்னை,
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலின் வர்ணனையாளர் குழுவில் முன்னாள் வீரர்கள் ஸ்ரீகாந்த், பத்ரிநாத், எல்.பாலாஜி உள்பட 14 பேர் இடம் பிடித்துள்ளனர்.
வர்ணனையாளர் பட்டியல் அறிவிப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் இந்திய முன்னாள் வீரர் பத்ரிநாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த சீசனில் அனுபவம் இல்லாத பந்து வீச்சாளர்களுடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனியின் சிறப்பான வழிநடத்துதலால் கோப்பையை வென்றது. வீரர்களின் பலம், பலவீனத்தை நன்கு புரிந்து வைத்து இருக்கும் டோனி வீரர்களை சரியாக பயன்படுத்துவதில் கில்லாடி.
எந்த சமயத்தில் எந்த வீரரை பயன்படுத்த வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அது தான் சென்னை அணியின் வெற்றி ரகசியமாகும். கடந்த ஆண்டை விட தற்போது சென்னை அணியின் பந்து வீச்சு அனுபவம் வாய்ந்ததாகவும், வலுவானதாகவும் இருக்கிறது. எனவே சென்னை அணி சிறப்பாக செயல்படும் என்பதில் சந்தேகமில்லை. கேப்டன் டோனி நல்ல நிலையில் இருக்கிறார். அவர் முழுமையாக ஆடுவார் என்று நினைக்கிறேன். அவரிடம் ஒரு கேப்டனாகவும், வெற்றிகரமாக ஆட்டத்தை முடிக்கும் பேட்ஸ்மேனாகவும் அணிக்கு பங்களிக்கும் திறன் இன்னும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.