இதற்கு பதிலாக தோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் - ஹர்பஜன் விமர்சனம்
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், சாம் கர்ரண் தலைமையிலான பஞ்சாப் கிங்சும் மோதின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 43 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப், சென்னை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. அந்த அளவிற்கு சிறப்பாக பந்துவீசிய சென்னை தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
முன்னதாக இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ். தோனி தம்முடைய கெரியரிலேயே முதல் முறையாக 9-வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். குறிப்பாக 42 வயதை கடந்து விட்டதால் முழங்கால் வலியை கொண்டுள்ள அவர் கடந்த வருடத்திலிருந்து கடைசி கட்ட ஓவர்களில் களமிறங்கி ஓரிரு பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு வருகிறார். அந்த வரிசையில் இப்போட்டியில் விக்கெட்டுகள் விழுந்தாலும் நிறைய ஓவர்கள் மீதமிருந்த காரணத்தால் சான்ட்னர், தாக்கூர் ஆகியோர் அவுட்டான பின் 9-வதாக தோனி களமிறங்கினார். அப்போது ஹர்ஷல் படேல் வீசிய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டான அவர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.
இந்நிலையில் 9-வது இடத்தில் விளையாடுவதற்கு பதிலாக பேசாமல் தோனி பேட்டிங் செய்ய வராமலேயே இருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "ஒருவேளை 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய விரும்பினால் தோனி விளையாடக் கூடாது. அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் தோனியை போல் ஷாட்டுகளை அடித்ததில்லை. எனவே தோனி ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை.
அவருடைய அனுமதியின்றி சி.எஸ்.கே. அணியில் எதுவும் நடக்காது. எனவே தோனியை கீழே இறக்கும் முடிவை வேறு யாராவது எடுத்திருப்பார் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது. கடைசி நேரத்தில் வேகமாக ரன்கள் தேவைப்பட்டபோது கடந்த போட்டிகளில் அசத்திய தோனி பஞ்சாப்புக்கு எதிரான இப்போட்டியில் பின்தங்கியது ஆச்சரியமாக இருந்தது. இன்று (அதாவது நேற்று) சி.எஸ்.கே. வெற்றி பெற்றாலும் நான் தோனியை முன்கூட்டியே பேட்டிங் செய்ய அழைப்பேன். இதற்காக ரசிகர்கள் என்ன சொன்னாலும் நான் இதையே சொல்வேன்" என்று கூறினார்.