இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி தோனி கேப்டன் பதவியை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உள்ளது - அம்பத்தி ராயுடு
|இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.
மும்பை,
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் கேப்டனாக உள்ளார். இவரது தலைமையிலேயே சென்னை அணி இதுவரை 5 கோப்பைகளையும் வென்றுள்ளது.
அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பின் காரணமாக தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற பேச்சுகள் அதிகம் எழுந்து வந்த வேளையில் கடந்த ஆண்டு இறுதியில் தோனி ரசிகர்களின் அன்பிற்கும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு ஆண்டு விளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். அதன் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர்தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி ஒரு போட்டியின் ஏதோ ஒரு இன்னிங்சில் வருங்கால கேப்டனாக கருதப்படும் வீரரிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை தோனி கொடுப்பதற்கான வாய்ப்புள்ளதாக ராயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இம்பேக்ட் வீரர் விதிமுறையை பயன்படுத்தி அவர் இருக்கையின் பின்னே அமர்ந்து யாராவது ஒருவரை பாதியிலேயே கேப்டனாக ப்ரோமோஷன் செய்வதற்கு வாய்ப்புள்ளது. இந்த ஐ.பி.எல் தோனிக்கு கடைசியாக இருக்கும் பட்சத்தில் இது சி.எஸ்.கே அணியில் மாற்றம் ஏற்படும் வருடமாக அமையலாம்.
அதே சமயம் இன்னும் சில வருடங்கள் விளையாடலாம் என்று முடிவெடுத்து விட்டால் தோனி தொடர்ந்து கேப்டனாக இருப்பார். தனிப்பட்ட முறையில் நான் தோனி கேப்டனாக பார்ப்பதையே விரும்புகிறேன். ஒருவேளை அவர் இந்த வருடம் விளையாட முடிவெடுத்து விட்டால் 10 சதவீதம் மட்டுமே பிட்டாக இருந்தாலும் கண்டிப்பாக விளையாடுவார்.
ஏனெனில் அவரைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். காயங்கள் அவரைப் கிரிக்கெட்டிலிருந்து வெளியே வைக்க முடியாது. இதற்கு முன்பும் அவர் எங்களுடன் விளையாடியுள்ளார். சொல்லப்போனால் கடந்த வருடம் கூட மோசமான முழங்கால் வலியுடன் அவர் விளையாடினார். எனவே முடிவெடுத்து விட்டால் அவர் முழு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதை எதுவும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.