< Back
கிரிக்கெட்
உலகிலேயே அதிகமாக நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி தான் - ரசல்
கிரிக்கெட்

உலகிலேயே அதிகமாக நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் தோனி தான் - ரசல்

தினத்தந்தி
|
9 April 2024 9:50 AM IST

தோனி பேட்டிங் செய்ய களம் இறங்குவது தெரிந்தவுடன் சென்னை ரசிகர்கள் மிகவும் சத்தம் எழுப்பினர்.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக இப்போட்டியில் சென்னை அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஷிவம் துபே அவுட் ஆனதும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி பேட்டிங் செய்ய களம் இறங்கினார்.

அப்போது கொல்கத்தா அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ரசல் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். தோனி பேட்டிங் செய்ய களம் இறங்குவது தெரிந்தவுடன் சென்னை ரசிகர்கள் மிகவும் சத்தம் எழுப்பினர். இதன் காரணமாக பவுண்டரி லைனில் பீல்டிங் செய்து கொண்டிருந்த ரசல் தனது காதுகளை மூடிக்கொண்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பின்னர் ரசல் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்த மனிதர் (தோனி) உலகில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர் என்று நான் எளிதாக நினைக்கிறேன் என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்