தோனி எனக்கு அப்பா மாதிரி.. அவர் சொல்ற சின்ன விஷயம்... - மதீஷா பதிரானா
|சி.எஸ்.கே அணியில் தோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பதிரானா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சென்னை,
நடப்பு ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் 10 போட்டிகளில் 5 வெற்றியும், 5 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் சென்னை கட்டாயம் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த அணிக்கு இலங்கையை சேர்ந்த இளம் வீரர் மதிஷா பதிரானா வேகப்பந்து வீச்சு துறையில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.அவர் கடைசிக்கட்ட ஓவர்களில் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக கடந்த வருடம் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் எடுத்த அவர் சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் சி.எஸ்.கே அணியில் தோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பதிரானா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். மேலும் தோனி கொடுக்கும் சிறிய ஆலோசனைகள் கூட பெரிய அளவில் அசத்துவதற்கு உதவுவதாக உள்ளது என தெரிவிக்கும் அவர் இது பற்றி சி.எஸ்.கே நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு,
என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார்.
அதுவே போதும் என்று நினைக்கிறேன். களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.