< Back
கிரிக்கெட்
தோனி என் பாக்கெட்டில் இருக்கிறார்- கெவின் பீட்டர்சன் - ஜாகீர் கான் இடையே நடந்த ஜாலியான உரையாடல்
கிரிக்கெட்

'தோனி என் பாக்கெட்டில் இருக்கிறார்'- கெவின் பீட்டர்சன் - ஜாகீர் கான் இடையே நடந்த ஜாலியான உரையாடல்

தினத்தந்தி
|
7 Feb 2024 5:49 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வருகின்றனர்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் ஆளுக்கு ஒன்று வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த சில முன்னாள் வீரர்கள் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் இத்தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 2-வது போட்டியின்போது முன்னாள் இந்திய கேப்டன் தோனி தன்னுடைய பாக்கெட்டில் இருப்பதாக சக வர்ணனையாளர் ஜாகீர் கானிடம் அவர் ஜாலியாக வம்பிழுத்தார். அதற்கு யுவராஜ் சிங் உங்களை பலமுறை அவுட்டாக்கி தம்முடைய பாக்கெட்டில் போட்டதை மறந்து விடாதீர்கள் என்று ஜாகீர் கான் பதிலடி கொடுத்தார்.

இது குறித்து அவர்கள் நிகழ்த்திய ஜாலியான உரையாடலின் தொகுப்பு பின்வருமாறு:-

கெவின் பீட்டர்சன்: என்னுடைய பாக்கெட்டில் யார் இருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? மகத்தான மகேந்திர சிங் தோனி.

ஜாகீர் கான்: நான் சமீபத்தில் யுவராஜ் சிங்கை சந்தித்தேன். அவர் என்னிடம் உங்களை பற்றி பேசினார்.

கெவின் பீட்டர்சன்: ஆம் எனக்கு தெரியும். நீங்கள் அதை சொல்வீர்கள் என்று எனக்கு தெரியும். யுவராஜ் என்னை சில முறை அவுட்டாக்கியுள்ளார்.

ஜாகீர் கான்: அதனால் நீங்கள் ஒரு பட்டப்பெயரை யுவராஜ் சிங்கிற்கு கொடுத்தது எனக்கு நினைவிருக்கிறது.

கெவின் பீட்டர்சன்: ஆம் அதை யுவராஜ் தன்னுடைய இமெயில் முகவரியாக நீண்ட காலம் பயன்படுத்தினார். களத்தில் எங்களுக்கிடையே சில அழகான போட்டி நடந்துள்ளது. நீண்ட காலம் நீங்கள் விளையாடும்போது இதுதான் நடக்கும். அதைப்பற்றி ஜாலியாக பேசும் வாய்ப்பு கிடைப்பது நல்ல விஷயமாகும். அஸ்வினும், பென் ஸ்டோக்சும் இதேபோல விளையாடி முடித்த பின் பேசி மகிழ்வார்கள்.

ஜாகீர் கான் கூறுவதுபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் கெவின் பீட்டர்சனை இந்தியாவின் யுவராஜ் சிங் 5 முறை அவுட்டாக்கியுள்ளார். அதன் வாயிலாக ஒருநாள் போட்டிகளில் கெவின் பீட்டர்சனை அதிக முறை அவுட் செய்த பவுலர் என்ற பெருமையை யுவராஜ் சிங் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்