< Back
கிரிக்கெட்
தோனி சிறந்த பினிஷர்...அவரை முன்வரிசையில் களமிறக்குவது சரியான முடிவல்ல - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

image courtesy: twitter/@ChennaiIPL

கிரிக்கெட்

தோனி சிறந்த பினிஷர்...அவரை முன்வரிசையில் களமிறக்குவது சரியான முடிவல்ல - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
8 April 2024 1:26 PM IST

ஐ.பி.எல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

மும்பை,

ஐ.பி.எல் தொடரில் சென்னையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை கொல்கத்தா அணி ஆடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் சென்னை அணி விளையாடிய 4 ஆட்டங்களில் 2 வெற்றி, 2 தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. முன்னதாக இந்த வருடம் கேப்டன்ஷிப் பதவியை துறந்து விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் எம்.எஸ். தோனி முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யவில்லை.

மேலும் டெல்லிக்கு எதிராக வெற்றி பறிபோன பின் 37* (16) ரன்கள் அடித்த அவர், ஐதராபாத்துக்கு எதிரான 4வது போட்டியிலும் கடைசி ஓவரில் வந்து 1* (2) ரன்கள் மட்டுமே எடுத்தது சென்னை அணிக்கு உதவவில்லை. அதனால் தோனி முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சஞ்சய் மஞ்ரேக்கர், தோனி முன்கூட்டியே களமிறங்குவது சரியான முடிவல்ல என கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, அப்படியானால் டேரில் மிட்சேல், ரவீந்திர ஜடேஜா அல்லது ஷிவம் துபேவுக்கு முன் தோனி களமிறங்க வேண்டும்.

அது சரியான முடிவா..? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது சரியான முடிவாக இருக்காது. கடந்த வருடத்தை போலவே இம்முறையும் தோனி ஓரிரு பந்துகளை எதிர்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் ரன்களை அடிப்பதையே நான் விரும்புகிறேன்.

ருதுராஜ்-க்கு ஆலோசனை கொடுப்பதும் விக்கெட் கீப்பிங் செய்வதுமே தோனியின் பலம். எனவே அவரை 3, 4வது இடத்தில் இறக்குவது நல்ல ஐடியா கிடையாது என கூறினார். இந்த கருத்து குறித்து அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறியதாவது,

சரியாக சொன்னீர்கள் சஞ்சய். தோனி அதை செய்ய வேண்டியதில்லை. சில நேரங்களில் அவர் டாப் ஆர்டரில் விளையாடினாலும் பொதுவாக தோனி என்பவர் பினிஷர். இந்த விளையாட்டின் மகத்தான பினிஷரான தோனி அதை மாற்ற வேண்டியதில்லை.

தோனி கடைசியில் இருப்பது ஆரம்பத்தில் களமிறங்கும் மற்ற பேட்ஸ்மேன்கள் எளிதாக ரிஸ்க் எடுத்து விளையாடுவதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கும். தோனி நீண்ட காலமாக தேவையான அளவுக்கு கடினமான வேலைகளை செய்து முடித்து விட்டார். எனவே இது மற்ற வீரர்கள் அசத்த வேண்டிய நேரமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்