< Back
கிரிக்கெட்
விவாகரத்து குறித்த வதந்திகள் வேதனை தருகிறது-  சஹால் மனைவி தனஸ்ரீ வர்மா
கிரிக்கெட்

"விவாகரத்து குறித்த வதந்திகள் வேதனை தருகிறது"- சஹால் மனைவி தனஸ்ரீ வர்மா

தினத்தந்தி
|
21 Aug 2022 9:33 PM IST

விவாகரத்து குறித்த வதந்திகள் மிகவும் வேதனை தருவதாக தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக தற்போது திகழ்கிறார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனஸ்ரீ வர்மா சமூக வலைத்தளங்களில் மிகவும் 'ஆக்ட்டிவாக' இருப்பவர். இவர் பதிவிடும் நடன வீடியோக்களை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடருகின்றனர்.

திருமணத்திற்கு பிறகு இன்ஸ்டாகிராமில் 'தனஸ்ரீ சஹால்' என்ற பெயருடன் தனஸ்ரீ தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் அவர் தற்போது தனது கணவரின் பெயரை நீக்கி மீண்டும் தனஸ்ரீ வர்மா என மாற்றினார்.

இதனால் சஹால்- தனஸ்ரீ வர்மா இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிகிறார்களா என ரசிகர்கள் குழப்பம் அடைந்து இருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக யுஸ்வேந்திர சஹால், "எங்கள் உறவு தொடர்பான எந்த விதமான வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று உங்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்" என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்த வதந்திகள் மிகவும் வேதனை தருவதாக தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார். தனது உடல்நலம் மற்றும் விவாகரத்து குறித்த வதந்திகள் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் நீண்ட பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

தனஸ்ரீ வர்மா வெளியிட்டுள்ள பதிவில், "காயம் காரணமாக நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். இதனால் எனது கணவர், எனது குடும்பத்தினர் மற்றும் எனது நெருங்கிய உறவினர்கள் உட்பட எனது நெருங்கிய மற்றும் அன்பானவர்களின் ஆதரவும் இதன் மூலம் எனக்கு கிடைத்துள்ளது.

இந்த நேரத்தில்தான் எனக்கு மிகவும் ஆதரவு தேவைப்பட்டது. மக்கள் எங்களைப் பற்றிய சில சீரற்ற செய்திகளை பேசியது குறித்து அறிந்த போது வேதனையாக இருந்தது. நான் கடினமாக உழைத்து படிப்படியாக என் மரியாதையைப் பெற்றுள்ளேன். இந்த ஆதாரமற்ற வதந்தியால் அதை இழக்க நான் அனுமதிக்கப் போவதில்லை" என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவின் இறுதியில் அவர் "DVC" என பதிவிட்டுள்ளார். தனஸ்ரீ வர்மா சஹால் என்பதை சுருக்கி அவர் அவ்வாறு பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்