ஏமாற்றங்கள் இருந்தாலும், தொடர்ந்து போராட வேண்டும் - தோல்விக்கு பின் சாம் கர்ரண் பேட்டி
|ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் தோல்விடைந்துது.
தர்மசாலா,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 47 பந்துகளில் 6 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 92 ரன்களை விளாசினார். பஞ்சாப் அணி தரப்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி 17 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரோசோவ் 27 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். பெங்களூரு அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், ஸ்பவ்னில் சிங், பெர்குசன் மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது. மீதமுள்ள 2 போட்டிகளை வென்றாலும் பஞ்சாப் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாது.
இந்த தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பேசுகையில், " ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பது விரக்தியாகவும் ஏமாற்றமாகவும் உள்ளது. இந்த போட்டியிலும் ஏராளமான பாசிட்டிவ் விஷயங்கள் நடந்தன. ஆனால் வெற்றிபெறும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை. அதுவும் தேவையான நேரத்தில் வெல்ல முடியவில்லை. பஞ்சாப் அணி சிறந்த அணியாக உள்ளது. அதனால் எனது அணியை வழிநடத்துவது நம்பிக்கையாகவும் இருந்தது.
நிச்சயம் அடுத்த சீசனில் கூடுதல் பலத்துடன் வர வேண்டும். நிச்சயம் பஞ்சாப் அணியை வழிநடத்தியது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இன்னும் சில போட்டிகளை வென்றிருந்தால், மகிழ்ந்திருப்பேன். இந்த சீசனில் சில போட்டிகளில் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். சேசிங்கில் வரலாறு படைத்தோம். ஐ.பி.எல். தொடரில் ஏற்ற, இறக்கங்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது. பஞ்சாப் அணியின் ஓய்வறையில் ஏராளமான அனுபவங்கள் உள்ளன. அதன் வாயிலாக கற்க வேண்டும். ஏமாற்றங்கள் இருந்தாலும், தொடர்ந்து போராட வேண்டும்" என்று கூறினார்.