< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடர் ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்

image courtesy; AFP

கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடர் ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது - ஜோஸ் பட்லர்

தினத்தந்தி
|
9 Nov 2023 10:44 AM IST

உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.

புனே,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

இதில் நேற்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்துடன் மோதியது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் சதமும், டேவிட் மலான் மற்றும் கிறிஸ் வோக்ஸ் அரைசதமும் அடித்தனர்.

பின்னர் 340 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 160 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், மொயின் அலி தலா 3 விக்கெட்டுகளும், டேவிட் வில்லே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கூறுகையில்;- 'இந்த வெற்றிக்காக தான் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். இந்த ஆட்டத்தில் டேவிட் மலான் எங்களுக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தார். அதன்பிறகு ஸ்டோக்ஸ் மற்றும் வோக்ஸ் விளையாடிய விதம் மிக அற்புதமாக இருந்தது. அவர்களது பார்ட்னர்ஷிப் எங்களை பெரிய ரன் குவிப்பிற்கு அழைத்துச் சென்றது.

ஸ்டோக்ஸ் போன்ற ஒரு வீரர் எப்பொழுதுமே மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் கிறிஸ் வோக்ஸ் உடன் இணைந்து அமைத்த பார்ட்னர்ஷிப் எங்கள் அணியின் வெற்றிக்கு உதவியது. இந்த மைதானத்தில் அனைவருமே சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது என்று கூறியதால் பந்துவீச்சில் நாங்கள் சரியாக செயல்பட வேண்டியது அவசியம் என்று நினைத்தேன்.

அந்த வகையில் எங்களது பந்துவீச்சாளர்களும் இந்த ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த நாங்கள் வெற்றி பெற்றோம். எங்களது அணியில் வோக்ஸ் ஒரு மிகச் சிறப்பான வீரர் அவரால் பந்து வீசவும் முடியும் அதே போன்று பேட்டிங்கிலும் கைகொடுக்க முடியும். இந்த தொடர் ஒட்டுமொத்தமாகவே எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும் இந்த வெற்றி ஓரளவுக்கு ஆறுதலை தந்துள்ளது' என கூறினார்.

மேலும் செய்திகள்