வார்னர் அபாரம்: முதல் வெற்றியை பதிவு செய்த டெல்லி அணி...!!
|கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
புதுடெல்லி,
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் டெல்லியில் நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் போட்டிகான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனை மழை நின்ற பிறகு போட்டிகான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் , லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் லிட்டன் தாஸ் 4 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர் . இதனால் வெங்கடேஷ் ஐயர் ரன் எதுவும் எடுக்காமலும் , நிதிஸ் ராணா 4 ரன்னும் , மந்தீப் சிங் 12 ரன்களும், ரிங்கு சிங் 6 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் ஜேசன் ராய் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய அவர் சிறப்பாக ஆடினார். தொடர்ந்து ஆடிய அவர் 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் அதிரடியாக சிக்ஸர்கள் அடித்த ரசல் 31 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார்.
இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக இஷாந்த் சர்மா , நோர்ஜே , அக்சர் படேல் , குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மிட்சல் மார்ஷ் 2 ரன்னும், பிலிப் சால்ட் 5 ரன்னும் எடுத்து வெளியேறினர்.
மறுமுனையில் அதிரடியாக ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 33 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். அடுத்ததாக வார்னருடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில் வார்னர் 57 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மணிஷ் பாண்டேவுடன், அக்சர் பட்டேல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் மணீஷ் பாண்டே 21 ரன்களில் கேட்ச் ஆனநிலையில், அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஹக்கிம் கான் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்து களமிறக்கிய லலித் யாதவுடன் ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில் அக்சர் பட்டேல் 19 (22) ரன்களும், லலித் யாதவ் 4 (7) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 19.2 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன்மூலம் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது. மேலும் ஐபிஎல் தொடரின் தனது முதல் வெற்றியை டெல்லி அணி பதிவு செய்தது.