ஷபாலி வர்மா அதிரடி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி அணி
|குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
2-வது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த கடைசி லீக்கில் டெல்லி கேப்பிட்டல்சும், குஜராத் ஜெயன்ட்சும் மல்லுக்கட்டின.
'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த குஜராத் அணியில் கேப்டன் பெத் மூனி (0), லாரா வோல்வார்த் (7 ரன்), ஹேமலதா (4 ரன்) ஆகியோர் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இந்த சறுக்கலில் இருந்து அணியை காப்பாற்ற முயற்சித்த ஆஷ்லி கார்ட்னெர் (12 ரன்), லிட்ச்பீல்டு (21 ரன்) 11-வது ஓவருக்குள் அடங்கினர்.
6-வது விக்கெட்டுக்கு பார்தி புல்மாலியும், கேத்ரின் பிரைசும் இணைந்து அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். ஸ்கோர் 116-ஐ எட்டிய போது புல்மாலி 42 ரன்னில் (36 பந்து, 7 பவுண்டரி) போல்டு ஆனார். பிரைஸ் தனது பங்குக்கு 28 ரன் எடுத்தார். 20 ஓவர்களில் குஜராத் 9 விக்கெட்டுக்கு 126 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. டெல்லி தரப்பில் மரிஜானே காப், ஷிகா பாண்டே, மின்னு மணி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து களம் புகுந்த டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை வசப்படுத்தியது. ஷபாலி வர்மா 71 ரன்களும் (37 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் 38 ரன்களும் விளாசினர்.
லீக் சுற்று முடிவில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் டெல்லி அணி முதலிடம் பிடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.
2-வது மற்றும் 3-வது இடங்களை பெற்ற மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளி), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ (8 புள்ளி) அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் நாளை (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். உ.பி. வாரியர்ஸ் (6 புள்ளி), குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளி) அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.