< Back
கிரிக்கெட்
பெண்கள் பிரிமீயர் லீக்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

தினத்தந்தி
|
13 March 2023 10:48 PM IST

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்) மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி-பெங்களூரு அணிகள் மோதின.

அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத்தேர்வு செய்தது. இதன்படி முதலாவதாக களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் மந்தனா 8 ரன்களும், டிவைன் 21 ரன்களும் எடுத்து சோபிக்கத் தவறினர். அடுத்ததாக பெர்ரியுடன், நைட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் நைட் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ரிச்சா கோஸ் களமிறங்கினார்.

அதிரடியாக ரன் சேர்த்த இந்த ஜோடியில் பெர்ரி தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கோஸ் 37 (16) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் எல்லீஸ் பெர்ரி 67 (52) ரன்களும், பாட்டீல் 4 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் களமிறங்கிய ஷபாலி வர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்ஸ் 38 ரன்களும், கேப்டன் மெக் லான்னிங் 15 ரன்களும், ரோட்ரியாஸ் 32 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து ஜோடி சேர்ந்த கேப் மற்றும் ஜோனேசன் அதிரடியாக ரன்களை குவித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் கேப் 32 (32) ரன்களும், ஜோனேசன் 29 (15) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 19.4 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷோபனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

பெங்களூரு அணி இதுவரை ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாதநிலையில், தொடர்ந்து அந்த அணி ஆடிய 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்