பந்து வீச்சில் தாமதம்...அபராதம் வேலை செய்யாது; மாற்று யோசனை கூறிய இங்கிலாந்து முன்னாள் வீரர்...!
|இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதால் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
லண்டன்,
லண்டன் ஓவலில் நடந்த 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் 5 ஓவர்களை வீசி முடிக்காமல் இருந்தது. இதேபோல் ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்களை வீசி முடிக்கவில்லை.
இது குறித்து கள நடுவர்கள் அளித்த அறிக்கையை அடுத்து ஐ.சி.சி. போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சன் இந்திய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலிய அணியினருக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதமாக விதித்தார்.
இந்நிலையில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்து வீசி முடிக்காமல் பந்துவீச்சில் தாமதம் ஏற்படுத்துவதற்கு அபராதம் விதிப்பது வேலை செய்யாது. இந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க அபராதம் போதுமானதாக இருக்காது.
அதற்கு பதிலாக இதை செய்யலாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆட்டக்காரர் மைக்கேல் வாஹன் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
அபராதம் வேலை செய்யாது .. எனவே ஆட்டத்தின் முடிவில் பேட்டிங் செய்யும் அணிக்கு ரன்கள் வழங்கப்படுவது மட்டுமே ஒரே வழி.. ஓவருக்கு 20 ரன்கள் ..
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.