இங்கிலாந்துக்கு எதிரான தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது: பாக். கேப்டன் பாபர் அசாம்
|பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.
கராச்சி,
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது.
இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் 304 ரன்னும், இங்கிலாந்து 354 ரன்னும் எடுத்தன. 50 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 216 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
சுலப இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 50 ரன்களுடனும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாளான நேற்று பென் டக்கெட், பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். 38 நிமிடங்களில் இலக்கை விரட்டிப்பிடித்தனர். இங்கிலாந்து அணி 28.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென் டக்கெட் 82 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 35 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
முதல் இன்னிங்சில் சதம் அடித்ததுடன் இந்த தொடரில் 3 சதங்களுடன் 468 ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார்.
தொடரை முழுமையாக கைப்பற்றியது
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது. முதலாவது டெஸ்டில் 74 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் 26 ரன் வித்தியாசத்திலும் அந்த அணி வெற்றி பெற்றிருந்தது.
சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி முழுமையாக தோல்வி அடைவது (ஒயிட் வாஷ்) இதுவே முறையாகும். அந்த வகையில் 17 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இங்கிலாந்து புதிய வரலாறு படைத்து விட்டது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் வெற்றிக்கு இங்கிலாந்து அணி 12 புள்ளிகள் பெற்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இங்கிலாந்து 46.97 சதவீத புள்ளியுடன் 5-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணியின் வெற்றி கோட்டை என்று வர்ணிக்கப்படும் கராச்சி நேஷனல் ஸ்டேடியத்தில் அந்த அணி தோற்பது அபூர்வமாகும். இங்கு இதுவரை 45 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பாகிஸ்தான் சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். இதற்கு முன்பு 2000-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராகவும், 2007-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் தோற்றிருந்தது.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் தொடர்ந்து சந்தித்த 4-வது டெஸ்ட் தோல்வி இதுவாகும். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லாகூரில் நடந்த ஒரு டெஸ்டில் தோற்று இருந்தது. உள்ளூரில் தொடர்ந்து 4 டெஸ்டுகளில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.
தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில், 'ஒரு அணியாக இந்த தோல்வி ஏமாற்றம் அளிக்கிறது. சரிவில் இருந்து மீண்டு வருவதற்கு போதுமான அளவுக்கு எங்களது ஆட்டம் நன்றாக அமையவில்லை. சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணிக்கே எல்லா பெருமையும் சேரும். முதல் இன்னிங்சில் நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தோம். நாங்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பாதிப்பை ஏற்படுத்தியது. எங்களது பவுலர்கள் சரிவில் இருந்து மீண்டு வர வலுவாக போராடினார்கள். இந்த தொடரில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறது. அதே நேரத்தில் எங்களது குறைகள் குறித்து ஆலோசித்து சரிசெய்வோம்' என்றார்.
பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 10-வது டெஸ்டில் ஆடிய இங்கிலாந்து அணி அதில் பெற்ற 9-வது வெற்றி இதுவாகும். பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ' சவாலான ஆடுகளமாக இருந்தாலும் அதற்கு தகுந்தபடி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் செயல்பட்டோம். ஒவ்வொரு வீரரும் ஏதாவது ஒரு கட்டத்தில் கைகொடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தனர். ஹாரி புரூக்கின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. தோல்வியை பற்றி பயப்படாமல் உற்சாகமாக விளையாடி ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது தாரக மந்திரம்' என்றார்.