உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக மும்பை, டெல்லி உள்பட 5 மைதானங்களை புதுப்பிக்க முடிவு
|இந்திய கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக மும்பை, டெல்லி உள்பட 5 மைதானங்களை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி,
உலகக் கோப்பை கிரிக்கெட்
இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டிக்காக ஆமதாபாத், மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத், லக்னோ, ராஜ்கோட், இந்தூர் கவுகாத்தி, தர்மசாலா ஆகிய 12 இடங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. ஆனால் போட்டி அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அக்டோபர் 5-ந்தேதி போட்டியை தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.
இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக குறைந்தது 5 மைதானங்களை புதுப்பிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் திகழ்கிறது. ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டி ஒளிபரப்பு மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கிறது. ஆனால் நாட்டில் பெரும்பாலான கிரிக்கெட் மைதானங்களில் அடிப்படை வசதி வாய்ப்புகள் சரியில்லை என்று அடிக்கடி எழும்பும் புகார்கள் கிரிக்கெட் வாரியத்தை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகிறது.
5 மைதானங்களில்...
கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியின் போது கழிவறை சுத்தமாக இல்லை என்று போட்டியை நேரில் பார்த்த ரசிகர் ஒருவர் புகார் தெரிவித்தார். இதே போல் பிரபலமான மும்பை வான்கடே ஸ்டேடியத்திலும் இத்தகைய புகாரை ரசிகர் ஒருவர் கூறியிருந்தார்.
இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்ட மைதானங்களில் என்னென்ன வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆராய்ந்து அதற்கான செலவினத்தையும் மதிப்பிட்டுள்ளது. இதன்படி 5 மைதானங்கள் புதுப்பிக்கப்படுகிறது. டெல்லி ஸ்டேடியத்திற்கு ரூ.100 கோடியும், ஐதராபாத்துக்கு ரூ.117.17 கோடியும், கொல்கத்தா ஈடன் கார்டனுக்கு ரூ.127.45 கோடியும், மொகாலிக்கு ரூ.79.46 கோடியும், மும்பை வான்கடேவுக்கு ரூ.78.82 கோடியும் ஒதுக்கப்படுகிறது. அடிப்படை வசதிகளின் தரத்தை மேம்படுத்தும் இந்த திட்டத்தில், மைதானத்தின் மேற்கூரை செப்பனிடும் பணி இடம்பெறாது. ஒரு வேளை மேற்கூரையையும் சரி செய்ய வேண்டி இருந்தால் செலவீன தொகை மேலும் உயரும்.
சென்னையில் பாகிஸ்தான் ஆட்டங்கள்?
இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி வருகை தரும் போது, அந்த அணி எந்த இடத்தில் விளையாடினால் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது. முன்பு இந்தியாவுக்கு வந்து விளையாடிய பயணங்களில், கொல்கத்தா, சென்னை மைதானங்கள் தங்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவும், மறக்க முடியாத இடங்களாகவும் இருந்தன என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே பாகிஸ்தான் அணிக்குரிய 9 லீக் ஆட்டங்களில் பெரும்பாலானவை கொல்கத்தா, சென்னையில் நடக்கவே அதிக வாய்ப்புள்ளது. என்றாலும் இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.