இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கு ஊதியம் வழங்க முடிவு
|வீரர்களுக்கு நிகராக வீராங்கனைகளுக்கு சம ஊதியம்(போட்டி கட்டணம்) வழங்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
லண்டன்,
சர்வதேச போட்டியில் விளையாடும் இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு, அந்த நாட்டு ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நிகராக ஊதியம் (போட்டி கட்டணம்) வழங்கப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து பெண்கள் அணியின் ஆட்டத்தை நேரில் காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மற்றும் டெலிவிஷனில் போட்டியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருப்பதை அடுத்து அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த வாரத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டித் தொடரில் இருந்து இங்கிலாந்து வீராங்கனைகளுக்கான ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. ஏற்கனவே இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் போட்டி கட்டணம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இங்கிலாந்தும் இணைகிறது. உலக கோப்பை போட்டிகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் போட்டிக்கும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த ஜூலை மாதம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.