< Back
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்ற டீன் எல்கர்.....கோலி மற்றும் ரோகித் கொடுத்த அன்பு பரிசு...!

image courtesy; twitter/@BCCI

கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்ற டீன் எல்கர்.....கோலி மற்றும் ரோகித் கொடுத்த அன்பு பரிசு...!

தினத்தந்தி
|
4 Jan 2024 8:37 PM IST

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் முன்பே அறிவித்திருந்தார்.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

முன்னதாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் அறிவித்திருந்தார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் 185 ரன்கள் விளாசி இந்தியாவை தோற்கடித்து ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். மேலும் 2வது போட்டியில் பவுமா காயமடைந்து வெளியேறியதால் தம்முடைய கடைசி போட்டியில் அணியை கேப்டனாக வழி நடத்தும் பொன்னான வாய்ப்பை பெற்ற அவர் முடிந்தளவுக்கு போராடியும் வெற்றி காண முடியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக தம்முடைய கேரியரை அர்ப்பணித்த அவர் 5000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். அத்துடன் கேப்டனாக விராட் கோலி தலைமையிலான இந்தியாவை 2 - 1 என்ற கணக்கில் தோற்கடித்த அவர் தென் ஆப்பிரிக்காவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார்.

அந்த வகையில் நவீன கிரிக்கெட்டின் சிறந்த டெஸ்ட் வீரர்களில் ஒருவராக அசத்தி விடை பெற்ற அவருக்கு போட்டியின் முடிவில் இந்தியாவின் விராட் கோலி தம்முடைய கையொப்பமிட்ட ஜெர்சியை நேராக சென்று கட்டியணைத்து பரிசாக வழங்கினார். முன்னதாக 2வது இன்னிங்சில் எல்கர் அவுட்டாகி செல்லும்போது ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டி அவருக்கு தலைவணங்குமாறு கேட்டுக்கொண்ட விராட் கோலி தற்போது ஜெர்சியை பரிசளித்து தன்னை மனதளவிலும் சிறந்தவர் என்பதை நிரூபித்துள்ளார்.

அதேபோல ஒட்டுமொத்த இந்திய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்பு பரிசாக கேப்டன் ரோகித் சர்மா டீன் எல்கருக்கு பரிசளித்தார். அந்த வகையில் 2 சிறந்த இந்திய வீரர்கள் டீன் எல்கருக்கு நெஞ்சை தொடும் பரிசை கொடுத்து வழி அனுப்பியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்