டி காக் அதிரடி சதம்.. வங்காளதேசத்துக்கு 383 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா..!
|வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.
மும்பை,
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வங்காளதேசத்துடன் மும்பையில் மோதி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி, அந்த அணி முதலில் களமிறங்கியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அனுபவ வீரர் குயிண்டன் டி காக்கும், ஹெண்ட்ரிக்சும் களமிறங்கினர். ஹெண்ட்ரிக்ஸ்12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் வான் டெர் டசன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து டி காக் மற்றும் கேப்டன் மார்க்ரம் இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 3-ம் விக்கெட்டுக்கு 131 ரன்களை திரட்டிய நிலையில் பிரிந்தது. நிதானமாக ஆடிவந்த மார்க்ரம், அரைசதம் அடித்த நிலையில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் டி காக்குடன் அதிரடி வீரர் கிளாசென் இணைந்தார். பொறுப்புடன் விளையாடிவந்த டி காக், சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த பின்னர் டி காக் அதிரடி காட்டினார். பந்துகளை நாலாபுறமும் பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனால் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
டி காக் இரட்டை சதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 174 ரன்கள் எடுத்து (140 பந்து, 15 பவுண்டரி, 7 சிக்சர்) பவுண்டரி லைனில் கேட்சாகி ஆட்டமிழந்தார். டி காக்- கிளாசென் ஜோடி 4-ம் விக்கெட்டுக்கு 142 ரன்கள் திரட்டியது.
தொடக்கம் முதலே அதிரடி காட்டிவந்த கிளாசென், 49 பந்துகளில் 2 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் மில்லர் அதிரடியுடன் 34 ரன்கள் எடுக்க, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் குவித்தது.
வங்காளதேச அணி தரப்பில் மெஹதி ஹசன், சொரிபுல் இஸ்லாம், ஷகிப் அல் ஹசன், ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். ஹசன் முஹ்மது 2 விக்கெட் எடுத்தார். இதனை தொடர்ந்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி விளையாட உள்ளது.