< Back
கிரிக்கெட்
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகல்: ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவன் சுமித் கேப்டன்

Image Courtesy : AFP 

கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகல்: ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்டீவன் சுமித் கேப்டன்

தினத்தந்தி
|
15 March 2023 3:08 AM IST

2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ந் தேதியும் நடக்கிறது.

ஆமதாபாத்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. நாக்பூர், டெல்லியில் நடந்த முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், இந்தூரில் நடந்த 3-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. ஆமதாபாத்தில் நடந்த கடைசி டெஸ்ட் 'டிரா'வில் முடிந்தது.

டெல்லியில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் மரியாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் உடனடியாக சிட்னிக்கு விரைந்தார். தாயார் மற்றும் குடும்பத்தினரை அருகில் இருந்து கவனிக்க வேண்டியதிருந்ததால் அவர் ஆஸ்திரேலியாவிலேயே தங்கி உள்ளார். இதனால் அவர் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டார். இதற்கிடையே கம்மின்சின் தாயார் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.

அடுத்ததாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி மும்பையில் வருகிற 17-ந் தேதியும், 2-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் 19-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி சென்னையில் 22-ந் தேதியும் நடக்கிறது.

கம்மின்ஸ் விலகல்

இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்தும் கேப்டன் கம்மின்ஸ் விலகி இருக்கிறார். அவர் இல்லாததால் கடைசி 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திய ஸ்டீவன் சுமித் ஒருநாள் போட்டிக்கான அணிக்கும் கேப்டனாக நீடிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஸ்டீவன் சுமித் ஏற்கனவே 51 ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மின்ஸ் குறித்து ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு கூறுகையில், 'கடினமான இந்த தருணத்தில் குடும்பத்தினரை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது இருப்பதால் கம்மின்ஸ் இந்தியா திரும்ப மாட்டார். துக்கமான இந்த சூழலை கடக்கும் கம்மின்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றியே எங்களது எண்ணங்கள் உள்ளன' அவர் மேலும் கூறுகையில், 'காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் டேவிட் வார்னர் ஒருநாள் தொடருக்காக இந்தியா வருகிறார். தற்போதைய சூழலில் அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பில் இருக்கிறார்' என்றார்.

ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஒதுங்கிய கம்மின்சுக்கு பதிலாக மாற்று வீரர் யாரும் அறிவிக்கப்படவில்லை. 2-வது டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் வீசிய பந்து ஹெல்மெட்டில் தாக்கியதாலும், முழங்கையில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாலும் நாடு திரும்பிய டேவிட் வார்னர் மற்றும் கணுக்காலில் ஆபரேஷன் செய்த வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் ஆகியோர் உடல் தகுதியை எட்டி இருப்பதால் ஒருநாள் போட்டி அணியில் இணைகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள்

ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், மிட்செல் ஸ்டார்க், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா.

மேலும் செய்திகள்