ராயுடுவின் இடத்திற்கு இந்த இந்திய வீரரை வாங்க சிஎஸ்கே முனைப்பு காட்டும் - ரவிச்சந்திரன் அஸ்வின்
|இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
சென்னை,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐ.பி.எல். அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு கடந்த மாதம் 26ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பித்தன.
இதனையடுத்து இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 1,166 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சென்னை அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரரான அம்பத்தி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இதனால் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக அவரது இடத்தை நிரப்ப எந்த வீரரை சென்னை அணி தேர்வு செய்யும்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் ராயுடுவுக்கு பதில் கருண் நாயரை வாங்க சிஎஸ்கே அணி முனைப்பு காட்டும் என தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கருத்தை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
என்னை பொருத்தவரை சிஎஸ்கே அணி ராயுடுவின் இடத்தில் விளையாட கருண் நாயரை ஏலத்தில் வாங்க முனைப்பு காட்டும். ஏனெனில் மிடில் ஆர்டருக்கு ஷாருக்கான் போன்ற அதிரடி வீரர்கள் செட்டாக மாட்டார்கள். எனவே அந்த இடத்தை பூர்த்தி செய்ய சுழற்பந்து வீச்சை நன்றாக எதிர்கொண்டு ஆடும் ஒரு பேட்ஸ்மேன் அவர்களுக்கு தேவை.
அந்த வகையில் பார்க்கையில் கருண் நாயர் சையத் முஸ்டாக் அலி தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார். அதனால் அவரை மஞ்சள் நிற உடையில் பார்க்க வாய்ப்பு இருக்கிறது.
அதோடு சிஎஸ்கே அணி பெரும்பாலான போட்டிகளை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதால் சுழற்பந்து வீச்சை சமாளித்து ஆடும் பேட்ஸ்மேன்கள் மீது அதிக ஆர்வம் காட்டும் தோனியும் அதையேதான் விரும்புவார். இவ்வாறு அவர் கூறினார்.