ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ருதுராஜ் சதமடித்த 2 போட்டிகளிலும் சி.எஸ்.கே தோல்வி - ரசிகர்கள் வருத்தம்
|நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட் 108 ரன்கள் அடித்தார்.
சென்னை,
ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.
சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 108 ரன்னும்,. ஷிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார். நேற்றைய போட்டியில் சென்னை கேப்டன் ருதுராக் அடித்த சதம் ஐ.பி.எல் வரலாற்றில் அவரது 2வது சதமாக பதிவானது. ஆனால் இதில் கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் ருதுராஜ் சதம் அடித்த இரு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது.
நேற்றைய ஆட்டத்திற்கு முன் கடந்த 2021ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் ருதுராஜ் சதம் (101 ரன்) அடித்திருந்தார். அந்த ஆட்டத்திலும் சென்னை அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. இந்த மோசமான சாதனையால் சென்னை ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.