ஐபிஎல் தொடரில் மற்ற எல்லா அணிகளை விட சிஎஸ்கேதான் சிறந்தது - மேத்யூ ஹைடன்
|ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார்.
சிட்னி,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் மாதம் 19-ந் தேதி துபாயில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகையாக ரூ. 24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் குறித்தும், ஐபிஎல் அணிகள் குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் ஐபிஎல் அணிகளிலேயே மிகச்சிறந்த அணி என்றால் அது சிஎஸ்கேதான் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- ' ஐபிஎல் அணிகளிலேயே மிகச்சிறந்த அணி என்றால் அது சிஎஸ்கேதான். சென்னை அணியின் ரசிகர்கள் தோனியை அவர்களது ஹீரோவாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே கிரிக்கெட் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மும்பை அணி திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களை சூப்பர் ஸ்டாராக மாற்றும். அதே வேலையைத்தான் சென்னை அணியும் செய்து வருகிறது. அவர்களும் சரியான வீரர்களை தேர்வு செய்து அவர்களது கெரியரை முன்னேற்ற உதவுகின்றனர்.
குறிப்பாக சென்னை அணியின் ரசிகர்கள் ஆதரவு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் சென்னை அணி இல்லாதபோதும் தோனியை ஆதரிக்க அவர்கள் புனே வரை சென்றனர். அந்த அளவிற்கு சிஎஸ்கே அணியை ரசிகர்கள் நேசிக்கின்றனர். தமிழ்நாட்டு வீரர்கள் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் விளையாடாதபோதும் அந்த அணிக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவு என்பது உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது. தோனியின் ஓய்வுக்கு பிறகும் அவரது புகழ் சென்னை அணியில் இருக்கும். அதே போன்று ரசிகர்களின் ஆதரவும் சென்னை அணிக்கு தொடரும்' என்று கூறினார்.
ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரான மேத்யூ ஹைடன் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.