< Back
கிரிக்கெட்
உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை.!

image credit: @OfficialSLC

கிரிக்கெட்

உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்தது இலங்கை.!

தினத்தந்தி
|
21 Oct 2023 6:42 PM IST

இலங்கை அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

லக்னோ,

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் லக்னோவில் இன்று நடைபெற்ற 19-வது லீக்கில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணி, குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. இலங்கை அணியின் அபார பந்துவீச்சால் நெதர்லாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. விக்ரம்ஜித் சிங் (4), மேக்ஸ் ஓடவுட் (16), அக்கர்மேன்(29), டி லீட்(6), நிதமானுரு (9), கேப்டன் எட்வர்ட்ஸ் (16), ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் நெதர்லாந்து அணி 91 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனை தொடர்ந்து சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் மற்றும் வான் பீக் ஆகியோர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்தனர். இதனால், நெதர்லாந்து அணி நல்ல ஸ்கோரை எட்டியது.

ஏங்கல்பிரெக்ட் 70 ரன்களும், வான் பீக் 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் நெதர்லாந்து அணி 49.4 ஓவர்களில் 262 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிஷாங்காவும், குசல் பெரேராவும் களமிறங்கினர். குசல் பெரேரா 5 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் குசல் மெண்டிஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து நிஷாங்கா- சமரவிக்ரமா இருவரும் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிஷாங்கா அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அசலங்கா 44 ரன்களும், தனஞ்ஜெயா டி சில்வா 30 ரன்களும் எடுத்து அவுட்டாகினர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிவந்த சமரவிக்ரமா, 91 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார்.

இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் வெற்றி இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அத்துடன், நடப்பு உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. நெதர்லாந்து அணி தரப்பில் ஆர்யன் தத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும் செய்திகள்