< Back
கிரிக்கெட்
உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
30 Oct 2023 6:02 AM IST

கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் இலங்கை அணி இன்று ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

புனே,

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடக்கும் 30-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இரு அணிகளும் தலா 2 வெற்றி, 3 தோல்வி என்று 4 புள்ளிகளுடன் உள்ள நிலையில் எஞ்சிய ஆட்டங்களில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். இன்றைய ஆட்டத்தின் முடிவு முக்கியம் என்பதால் இரு அணியினரும் களத்தில் வரிந்து கட்டி நிற்பார்கள். முதல் 3 ஆட்டங்களில் தோற்ற இலங்கை அணி அடுத்த இரு ஆட்டங்களில் நெதர்லாந்து, இங்கிலாந்தை வென்று , 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறி வைத்துள்ளது. மாற்று வீரர் மேத்யூசின் வருகை அந்த அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கேப்டன் மென்டிஸ், சமரவிக்ரமா, நிசாங்கா ஆகியோர் பேட்டிங்கிலும், மதுஷன்கா, ரஜிதா, தீக்ஷனா உள்ளிட்டோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர். இருப்பினும் எதிரணியின் சுழல் தாக்குதலை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே ஸ்கோர் வேகம் அமையும்.

ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இரு வெற்றிகளும் பெரிய அணிகளுக்கு எதிராக (இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக) பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 283 ரன் இலக்கை ஆப்கானிஸ்தான் ஒரு ஓவர் மீதம் வைத்து எட்டிப்பிடித்து பிரமாதப்படுத்தியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் இருவரும் தான் அந்த அணியின் பேட்டிங்கில் ஆணிவேராக உள்ளனர். இவர்கள் நிலைத்து நின்று ஆடிவிட்டால் அவர்களின் கைஓங்கி விடும். சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் (5 ஆட்டத்தில் 6 விக்கெட்) இதுவரை பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. அவர் சுழல் வித்தையை காட்டினால் இலங்கையையும் மிரட்டலாம்.

ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 11 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 7-ல் இலங்கையும், 3-ல் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா அல்லது திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ் (கே./வி.கீ.) சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, ஏஞ்சலோ மேத்யூஸ், மஹீஷ் தீக்ஷனா, கசுன் துஷித்த, மஷில் துஷித்த.

ஆப்கானிஸ்தான்: ரகுமானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விகீ), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-அக், பசல்ஹக் பாரூக்கி.

மேலும் செய்திகள்