உலகக்கோப்பை கிரிக்கெட்: நெதர்லாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பாகிஸ்தான்
|நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஐதராபாத்,
ஐசிசி நடத்தும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நேற்றுமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெற்றுவரும் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -நெதர்லாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பகார் ஜமான் 12 ரன்னிலும், இமாம் உல் ஹாக் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த கேப்டன் பாபர் அசாம் 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். இதனால் பாகிஸ்தான் அணி 10 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது.
இதனை தொடர்ந்து முகமது ரிஸ்வான், சகீல் இருவரும் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தனர். இருவரும் தலா 68 ரன்கள் எடுத்த நிலையில், அவுட்டாகி வெளியேறினர். அடுத்து வந்த பேட்ஸ்மேன்களான இப்திகார் அகமது 9 ரன்களும், முகமது நவாஸ் 39 ரன்களும், ஷதாப் கான் 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நெதர்லாந்து அணி தரப்பில் டி லீட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது.