உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்
|மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் நியூசிலாந்து அணி இன்று தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
புனே,
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 32-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நியூசிலாந்து அணி தனது முதல் 4 ஆட்டங்களில் இங்கிலாந்து, நெதர்லாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வென்றது. அதன் பிறகு அந்த அணி 2 ஆட்டங்களில் முறையே 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும், 5 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும் வீழ்ந்து புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 389 ரன் இலக்கை நெருங்கி வந்து தோற்றது. வலுவான நியூசிலாந்து அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் வியூகத்துடன் களம் காண உள்ளது.
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா 6 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளது. தனது 3-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திடம் 38 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த தென்ஆப்பிரிக்கா மற்ற ஆட்டங்களில் இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகளை பதம் பார்த்து 2-வது இடத்தில் இருக்கிறது. முந்தைய 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் முதுகு வலி காரணமாக கடந்த போட்டியில் ஆடாத ரபடா அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 71 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 25-ல் நியூசிலாந்தும், 41-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்று இருக்கின்றன. 5 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 8 தடவை மோதியதில் நியூசிலாந்து 6 ஆட்டத்திலும், தென்ஆப்பிரிக்கா 2 ஆட்டத்திலும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-
நியூசிலாந்து: டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, டிரென்ட் பவுல்ட், லோக்கி பெர்குசன் அல்லது டிம் சவுதி.
தென்ஆப்பிரிக்கா: பவுமா (கேப்டன்), குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம், கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜி, கேஷவ் மகராஜ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி அல்லது இங்கிடி.