உலகக் கோப்பை கிரிக்கெட்...! சுவாரசியமான ஒரு அலசல்
|பாகிஸ்தான் அணியின் பரிதாபம்; தடம் மாறிய கோலி; மிரள வைத்த தோல்விகள்: இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் இருந்து ருசிகரமான ஒரு தொகுப்பு.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. 45 ஆட்டங்கள் கொண்ட லீக் சுற்றில் 23 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் களத்தில் திரில், பரபரப்பு என்பதே பெரும்பாலும் இல்லை. 2-வது பேட்டிங்கில் கடைசி ஓவருக்கு ஆட்டம் நகர்வதே அபூர்வமாகி விட்டது. கணிசமான ஆட்டங்கள் ஒரு தரப்பாக அமைந்தது குறிப்பிட்ட அணிகளுக்கு சந்தோஷமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தான். எனினும் போக போக நெருக்கடியுடன் கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இதயத்துடிப்பு எகிற டென்ஷனான ஆட்டங்கள் வரக்கூடும் என்ற ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இனி இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் இருந்து ருசிகரமான ஒரு தொகுப்பு:-
ராசியில்லாத 'டாஸ்'
•நடந்து முடிந்துள்ள 23 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 11-லிலும், 2-வது பேட்டிங் செய்த அணிகள் 12-லிலும் வெற்றி பெற்றுள்ளன.
•6 ஆட்டங்களில் மட்டுமே 'டாஸ்' வென்ற அணிக்கு வெற்றி கிட்டியுள்ளது. மற்ற அனைத்திலும் சுவாகா தான்.
•இலங்கை அணி டாஸில் ஜெயித்த தனது முதல் 3 ஆட்டங்களிலும் தோற்றது. டாசை இழந்த 4-வது லீக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பதிவு செய்தது.
•மொத்தம் 19 சதங்கள் பதிவாகியுள்ளன. இதே வேகத்தில் வேட்டை தொடர்ந்தால் அதிக சதங்கள் நிகழ்ந்த உலகக் கோப்பை தொடரான 2015-ம் ஆண்டின் (38 சதம்) சாதனை காலியாகி விடும்.
•63 அரைசதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. 302 சிக்சரும், 1,092 பவுண்டரியும் நொறுக்கப்பட்டுள்ளன.
•அதிக ரன் குவிக்கப்பட்ட மைதானங்களின் பட்டியலில் முதலிடத்தில் தர்மசாலாவும் (4 ஆட்டத்தில் 1,904 ரன்), 2-வது இடத்தில் சென்னை சேப்பாக்கமும் (1.888 ரன்) உள்ளன.
•அணியில் அங்கம் வகிக்கும் 15 வீரர்களையும் முழுமையாக பயன் படுத்திய அணி இந்தியா மற்றும் இங்கிலாந்து.
அதிரவைத்த அதிர்ச்சி தோல்விகள்
எதிர்பார்த்தபடியே குட்டி அணிகள் என்று வர்ணிக்கப்படும் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து, ஜாம்பவான்களுக்கு 'தண்ணி' காட்டி விட்டன. ஆப்கானிஸ்தான் 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் நசுக்கியது. விளைவு... இப்போது இவ்விரு அணிகளின் அரைஇறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகி இருக்கிறது. நெதர்லாந்து அணி, தனது பங்குக்கு 38 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை போட்டுத் தாக்கியது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு அதிக அதிர்ச்சி தோல்விகள் அரங்கேறிய உலகக் கோப்பை தொடர் இது தான்.
இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்காவின் உத்தேச அணியில் இடம் பிடித்து, பின்னர் கழற்றிவிடப்பட்ட சுழற்பந்து வீசும் ஆல்-ரவுண்டர் வான்டெர் மெர்வ் நெதர்லாந்துக்கு இடம் பெயர்ந்து, அந்த அணியில் ஐக்கியமானார். 12 ஆண்டுக்கு பிறகு அதே இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு மாற்றாந்தாய் அணியின் மூலம் தடம்பதித்து, கடைசியில் சொந்த நாட்டு அணியையே கலங்கடித்து விட்டார். இந்த ஆட்டத்தில் வான்டெர் மெர்வின் பங்களிப்பு 29 ரன் மற்றும் 2 பிரதான விக்கெட்டுகள்.
'சேசிங்' சக்ரவர்த்தி இந்தியா
இந்த உலகக் கோப்பையில் தோல்வியையே சந்திக்காத ஒரே அணியான இந்தியா 5 ஆட்டங்களிலும் வாகை சூடி 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. 5 ஆட்டத்திலும் இலக்கை விரட்டிப்பிடித்திருப்பது (சேசிங்) தான் தனி அழகு. எப்போதுமே சேசிங்கில் தடுமாறும் இந்திய அணி, உலகக்கோப்பைக்கு முன்பாக ஆசிய கோப்பை சூப்பர்4 சுற்றில் வங்காளதேசத்திற்கு எதிராக கூட (266 ரன் இலக்கு) 'சேசிங்' செய்ய முடியாமல் சரண் அடைந்திருந்தது. அந்த குறையை போக்கும் விதமாக இந்தியா இந்த உலகக் கோப்பையை பிரமாதமாக தொடங்கி இருப்பது ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணி 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 5 ஆட்டத்தில் 'சேசிங்' செய்து சாதனை படைத்திருந்தது. அதை இந்தியா சமன் செய்திருக்கிறது.
பாகிஸ்தானின் நடுக்கம் பலித்தது
இந்தியாவுக்கு வருவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் ஐ.சி.சி.யிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் முக்கியமானவை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தை பெங்களூருவில் இருந்து சென்னைக்கும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மோதலை சென்னையில் இருந்து பெங்களூருவுக்கும் மாற்றும்படி கூறியது. பெங்களூரு மைதானத்தில் பவுண்டரி தூரம் குறைவு. ரன்மழைக்கு உகந்த மைதானம். இங்கு வலுவான ஆஸ்திரேலியாவின் பேட்டிங் படையை சமாளிப்பது சிரமம். இதே போல் ஆப்கானிஸ்தானின் பிரதான பலமான சுழற்பந்து வீச்சு தான். அத்துடன் ஐ.பி.எல்.-ல் விளையாடி பழக்கப்பட்டவர்கள். அதற்கு ஏற்ப சென்னை 'பிட்ச்' முழுக்க முழுக்க சுழலுக்கு அனுகூலமானது. அதனால் சுழல் ஜாலத்தால் மிரட்ட வாய்ப்புள்ளது. இதை எல்லாம் யோசித்து தான் பாகிஸ்தான் மேற்கண்ட மாற்றத்துக்கு தூபம் போட்டது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட காரணத்தை தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக அட்டவணையில் மாற்றம் செய்ய முடியாது என்று ஐ.சி.சி. கைவிரித்தது.
கடைசியில் பாகிஸ்தான் பயந்தபடியே நடந்தேறி விட்டது. பெங்களூருவில் டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் சதத்தோடு ஆஸ்திரேலியா 367 ரன்கள் குவித்து, பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சேப்பாக்கத்தில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. இதில் ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித்கான், முஜீப் ரகுமான், முகமது நபி, நூர் அகமது ஆகிய 4 பேர் சேர்ந்து 38 ஓவர்களில் 176 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். ஆனால் பாகிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் 21 ஓவர்கள் வீசி 131 ரன் வழங்கியும் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
'வெண்ணெய் தடவிய கை'
சில சமயம் கேட்ச்களை தவறவிடும்போது அது ஆட்டத்தின் போக்கையே தலைகீழாக மாற்றி விடும். இந்த உலகக் கோப்பையில் 20-க்கும் மேற்பட்ட கேட்ச்சுகளை கோட்டை விட்டுள்ளனர். இதில் இரு நழுவலை குறிப்பிட்டாக வேண்டும். பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் 10 ரன்னில் இருந்த போது கொடுத்த 'லட்டு' கேட்ச் வாய்ப்பை உஸ்மா மிர் வீணடித்தார். அப்புறம் என்ன..... கண்டம் தப்பிய வார்னர் பாகிஸ்தானின் பந்துவீச்சை பூந்தியாக சிதைத்து விட்டார். 163 ரன்கள் குவித்ததுடன் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.
சென்னையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 200 ரன் இலக்கை நோக்கி இந்தியா ஆடிய போது கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் வரிசையாக டக்-அவுட் ஆகி சொதப்பினர். மற்றொரு முன்னணி வீரர் விராட் கோலிக்கு 12 ரன்னில் மிட்செல் மார்ஷ் நல்ல கேட்ச்சை தவற விட்டார். அதை பிடித்திருந்தால் இந்திய அணியின் கதை ஏறக்குறைய முடிந்து போயிருக்கும். மார்சின் கருணையால் தப்பிய கோலி 85 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
தடம் மாறிய கோலி
எப்போதுமே தனிப்பட்ட சாதனைக்காக விளையாடுவதில்லை என்று கூறும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி அந்த பாதையில் இருந்து தடுமாறியதை இந்த உலகக் கோப்பையில் கண்கூடாக பார்க்க முடிந்தது.
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 257 ரன் இலக்கு, கோலியின் அதிரடியால் கைக்கு எட்டும் தூரத்துக்கு வெற்றி வந்தது. அவர் சதத்தை நெருங்கியதால் எதிர்முனையில் நின்ற லோகேஷ் ராகுலின் யோசனைப்படி ஒன்றிரண்டு ரன் ஓடுவதை தவிர்த்தார். இறுதியில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட போது, சிக்சருடன் வெற்றிக்கனியை பறித்து தனது 48-வது சதத்தையும் ருசித்தார். 'கோலியா.... அதுவும் உலகக் கோப்பையில் இப்படி சுயநலத்துடன் ஆடுவதா' என்று ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் சரமாரியாக வறுத்தெடுத்தனர்.
ஆனால் அவரது தீவிர ரசிகர் பட்டாளமோ சதத்தை உற்சாகமாக கொண்டாடினர். மைதானத்தில் ஒரு ரசிகை, கோலி சதம் அடித்தால் எனது காதலையே துறந்து விடுவேன் என்று வேடிக்கையான வாசகங்களுடன் கூடிய பதாகையை காட்டியது இதில் கூடுதல் சுவாரசியம்.
தர்மசாலாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் கோலி 95 ரன்னை எட்டியதும் செஞ்சுரி மோகத்தில் விளையாடினார். ஒரு ரன்னுக்கு ஓட மறுத்த அவர் சிக்சருடன் இலக்கையும், சதத்தையும் அடைய வேண்டும் என்ற திட்டத்துடன் பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அதன் பிறகு அணியில் பவுலர்கள் மட்டுமே இருந்ததால் வெளியில் இருந்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் சற்று பதற்றத்திற்கு உள்ளானார்கள். வியூகத்தை மாற்றிய நியூசிலாந்து, பீல்டர்களை கொஞ்சம் நெருக்கமாக நிறுத்தியது. நல்லவேளையாக ரவீந்திர ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு விரட்டி சுபம் போட்டார். இல்லாவிட்டால் கோலி அதிக விமர்சனத்திற்குள்ளாகி இருப்பார்.