உலகக் கோப்பை கிரிக்கெட்; அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆடம் ஜம்பா முதலிடம்
|நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆடம் ஜம்பா 13 விக்கெட்டுகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
புதுடெல்லி,
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல், வார்னர் ஆகியோரது அபார சதத்தோடு ஆஸ்திரேலிய அணி 309 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை ஊதித்தள்ளியது. ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா இந்த ஆட்டத்தில் 3 ஓவரில் 8 ரன் மட்டுமே வழங்கி 4 விக்கெட்டுகளை அள்ளினார்.
ஆடம் ஜம்பா தொடர்ந்து 3 ஆட்டங்களில் 4 விக்கெட் வீதம் அறுவடை செய்திருக்கிறார். இதன் மூலம் உலகக் கோப்பையில் 4 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளை தொடர்ந்து 3 ஆட்டங்களில் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற சிறப்பை ஜம்பா பெற்றார். ஏற்கனவே பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி 2011-ம் ஆண்டிலும், இந்தியாவின் முகமது ஷமி 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் இச்சாதனையை செய்துள்ளனர்.
அத்துடன் நடப்பு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் ஆடம் ஜம்பா 13 விக்கெட்டுகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னெர் (12 விக்கெட்) 2-வது இடத்தில் இருக்கிறார்.