20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி அரைஇறுதிக்கு முன்னேறும் - ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
|இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை அக்டோபர் 4-ந் தேதி சந்திக்கிறது.
டாக்கா,
பெண்களுக்கான 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 3-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை வங்காளதேசத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவை இந்த பிரிவில் இருக்கும் மற்ற அணிகளாகும். இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை அக்டோபர் 4-ந் தேதி சந்திக்கிறது.
இந்த போட்டி குறித்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறியதாவது:-
20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரைஇறுதியை எட்டுவார்கள் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்த அணிகள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றன. இந்த போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியை சந்திப்பது சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்களுக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினால், அது எங்களது நம்பிக்கையை நிறைய அதிகரிக்கும். அவர்களுக்கு எதிராக ஆடுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
வங்காளதேசத்தில் இருக்கும் சூழ்நிலையும், இந்தியாவில் நிலவும் தன்மையும் ஏறக்குறைய ஒன்று போன்றதாகும். இந்த சூழலில் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். உள்ளூர் அணியான வங்காளதேசம் எங்களை விட ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருப்பார்கள். நிச்சயமாக ரசிகர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது உற்சாகமானதாக இருக்கும். அவர்களுக்கு எதிராக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
எல்லா ஐ.சி.சி. போட்டிகளிலும் நாங்கள் நன்றாக விளையாடி இருக்கிறோம் என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் நிறைய நெருக்கமான ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளோம். ஆனால் இந்த முறை நெருக்கமான ஆட்டங்கள் அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வெல்வோம் என்று நம்புகிறேன்' என்றார்.