< Back
கிரிக்கெட்
ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு
கிரிக்கெட்

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய மகாகாலேஷ்வர் கோவிலில் கிரிக்கெட் வீரர்கள் வழிபாடு

தினத்தந்தி
|
23 Jan 2023 8:51 AM IST

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலில் சக வீரர்கள் வழிபாடு செய்துள்ளனர்.



உஜ்ஜைன்,


இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி கார் விபத்தில் சிக்கினார். சாலையின் தடுப்பில் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. எனினும், அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பிய அவர் தொடக்கத்தில் டேராடூனிலும், பின்பு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு கால் பகுதியில் அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில், அவர் 6 மாதங்கள் வரை ஓய்வு எடுக்க வேண்டி வரும் என கூறப்படுகிறது.

இதனால் அவர் இந்த வருடம் நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க மாட்டார் என ஏற்கனவே டெல்லி அணி நிர்வாகம் கூறியுள்ளது. இந்தியாவில் நடப்பு ஆண்டில் நடக்க இருக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு அவர் உடல்தகுதியை எட்டுவதும் சந்தேகம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரை, அவர் விளையாடாமலேயே இந்திய அணி கைப்பற்றி உள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாலேஷ்வர் கோவிலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களான சூரிய குமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

அவர்கள், பாபா மகாகால சுவாமிக்கு பஸ்ம ஆரத்தி செய்து வழிபாட்டில் ஈடுபட்டனர். இதுபற்றி சூரிய குமார் யாதவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ரிஷப் பண்ட் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என வேண்டி கொண்டோம்.

அவர் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டியது எங்களுக்கு மிக முக்கியம். நியூசிலாந்துக்கு எதிரான தொடரை நாங்கள் முன்பே வெற்றி பெற்று விட்டோம். அவர்களுக்கு எதிரான இறுதி போட்டியை விளையாட எதிர்பார்த்து இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்