< Back
கிரிக்கெட்
எந்த ஒரு வீரருக்கும் கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் - அர்ஷ்தீப் குறித்து முன்னாள் வீரர் அதிருப்தி
கிரிக்கெட்

எந்த ஒரு வீரருக்கும் கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியம் - அர்ஷ்தீப் குறித்து முன்னாள் வீரர் அதிருப்தி

தினத்தந்தி
|
3 Aug 2024 6:50 PM IST

அர்ஷ்தீப் சிங் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கண்டிப்பாக இம்ப்ரஸ் செய்திருக்க மாட்டார் டோட்டா கணேஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு,

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் 230 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக வெல்லலகே 67, நிசாங்கா 56 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 231 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் விரைவில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதே போல ஆட்டம் சமனில் இருந்தபோது கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில், ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆட்டமிழந்தனர். இதனால் இந்த ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஹசரங்கா மற்றும் அசலன்கா தலா 3 விக்கெட்டுகளும், வெல்லலகே 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

முன்னதாக இந்த போட்டியில் 1 விக்கெட்டை மட்டுமே கைவசம் வைத்திருந்த இந்தியாவுக்கு வெற்றி பெற கடைசி 14 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது வந்த அர்ஷ்தீப் சிங் சிங்கிள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அடித்து ஆட முயற்சித்த அவர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதனால் அர்ஷ்தீப் சிங்கை தற்போது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்படி ஒரு ஷாட்டை அடித்து அவுட்டான அர்ஷ்தீப் சிங் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை கண்டிப்பாக இம்ப்ரஸ் செய்திருக்க மாட்டார் என்று இந்திய முன்னாள் வீரர் டோட்டா கணேஷ் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "நீங்கள் கடைசி வரிசை வீரர்களிடம் ரன்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் எந்த ஒரு வீரருக்கும் கொஞ்சம் கிரிக்கெட்டைப் பற்றிய விழிப்புணர்வு மிகவும் முக்கியமானது. அர்ஷ்தீப் சிங்கின் அந்த ஷாட் கண்டிப்பாக பயிற்சியாளர் கம்பீரை இம்ப்ரஸ் செய்யப் போவதில்லை" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்