இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய ஒருநாள் போட்டி அணியில் தவான், பாண்ட்யா
|இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி அணிக்கு ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா திரும்புகிறார்கள்.
பர்மிங்காம்,
ஒரே ஒரு டெஸ்ட், மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. டெஸ்ட் முடிந்ததும் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் வருகிற 7-ந் தேதியும், 2-வது போட்டி பர்மிங்காமில் 9-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நாட்டிங்காமில் 10-ந் தேதியும், முதலாவது ஒருநாள் போட்டி லண்டன் ஓவலில் 12-ந் தேதியும், 2-வது போட்டி லண்டன் லார்ட்சில் 14-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் மான்செஸ்டரில் 17-ந் தேதியும் நடக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை, இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய ரோகித் சர்மா கேப்டனாக நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியில் ஆடும் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2-வது ஆட்டத்தில் இருந்து அவர்கள் அணியிருடன் இணைகிறார்கள்.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் 2-வது, 3-வது 20 ஓவர் போட்டிக்கான அணியில் தங்கள் இடத்தை இழக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை.அதே சமயம் அயர்லாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக், ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர்.
ஒருநாள் போட்டி அணிக்கு 36 வயது தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்குர், அக்ஷர் பட்டேல் ஆகியோர் திரும்பி இருக்கின்றனர். வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல்முறையாக ஒருநாள் போட்டி அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வினுக்கு இரு அணியிலும் இடமில்லை.
முதலாவது 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, வெங்கடேஷ் அய்யர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், அவேஷ்கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.
2-வது, 3-வது 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக்.
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், இஷான் கிஷன், விராட்கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
வருகிற 7-ந்தேதி தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 20 ஓவர் தொடரில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுமுக வேகப்பந்து வீச்சாளராக 34 வயதான ரிச்சர்ட் கிளீசன் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் தனது கேப்டன்ஷிப் பணியை தொடங்குகிறார்.
இங்கிலாந்து 20 ஓவர் போட்டி அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், சாம் கர்ரன், ரிச்சர்ட் கிளீசன், கிறிஸ் ஜோர்டான், லிவிங்ஸ்டன், டேவிட் மலான், டைமல் மில்ஸ், மேத்யூ பார்கின்சன், ஜாசன் ராய், பில் சால்ட், ரீஸ் தோப்லே, டேவிட் வில்லி.
ஒரு நாள் போட்டி அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் கர்ரன், லிவிங்ஸ்டன், கிரேக் ஓவர்டான், மேத்யூ பார்கின்சன், ஜோ ரூட், ஜாசன் ராய், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் தோப்லே, டேவிட் வில்லி.