சி.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட்: பார்படாஸ் ராயல்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த செயின்ட் லூசியா கிங்ஸ்...!
|செயின்ட் லூசியா அணி தரப்பில் மேத்யூ போர்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
செயின்ட் லூசியா,
6 அணிகள் இடையிலான 11வது கரிபியன் பிரிமீயர் லீக் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த தொடரில் நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் செயின்ட் லூசியா அணியை 11 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜமைக்கா வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ், பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 201 ரன் குவித்தது. அந்த அணி தரப்பில் சீன் வில்லியம்ஸ் 47 ரன், டு பிளெஸ்சிஸ் 46 ரன், சார்லஸ் 30 ரன் எடுத்தனர்.
இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பார்படாஸ் அணி களம் இறங்கியது. பார்படாஸ் அணி தரப்பில் கார்ன்வால் 0 ரன், மேயர்ஸ் 16 ரன், க்ரேவஸ் 0 ரன், விக்காம் 10 ரன், பவல் 0 ரன், ஹோல்டர் 10 ரன், பெரரியா 19 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி 55 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியில் பார்படாஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களே எடுத்தது. இதன் மூலம் செயின்ட் லூசியா அணி 54 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. செயின்ட் லூசியா அணி தரப்பில் மேத்யூ போர்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.