சர்ச்சைக்குரிய அவுட்…ஆத்திரத்தில் ஹெல்மட்டை'சிக்சருக்கு' விளாசிய பிராத்வைட் - வீடியோ
|மேக்ஸ் 60 கரீபியன் 2024 கிரிக்கெட் தொடரில் கரீபியன் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜார்ஜ் டவுன்,
மேக்ஸ் 60 கரீபியன் 2024 (Max60 Caribbean 2024) கிரிக்கெட் தொடரில் கடந்த 25ம் தேதி நடைபெற்ற முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் திசரா பெரேரா தலைமையிலான நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலைமையிலான கிராண்ட் கேமன் ஜாகுவார்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்தில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் தரப்பில் பேட்டிங் செய்ய வந்த கார்லோஸ் பிராத்வைட் 5 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜோசுவா லிட்டில் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பிராத்வைட் அவுட் ஆனார். ஆனால் கார்லோஸ் பிராத்வைட் அவுட் ஆன அந்த பந்து பேட்டில் படாமல் அவருடைய தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது.
ஆனால், அதனைக் கவனிக்காத போட்டியின் நடுவர் தனது கைகளை உயர்த்தி அவுட் என சிக்னல் கொடுத்துவிட்டார். இதனால் கடுப்பான பிராத்வைட் நடுவரைப் பார்த்துக்கொண்டே கோபத்துடன் பெவிலியனுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கோபமாக பெவிலியனுக்கு சென்று கொண்டிருந்த பிராத்வைட் திடீரென வேகமாகத் தனது ஹெல்மட்டை கழற்றி கையில் வைத்திருந்த பேட்டை வைத்து ஆக்ரோஷமாக மைதானத்தில் இருந்து வெளியே அடித்தார். இதன்காரணமாக ஹெல்மட் சிக்சர் லைனை தாண்டி சென்று விழுந்தது. பிறகு கையில் இருந்த பேட்டையும் தூக்கி எறிந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேக்ஸ் 60 கரீபியன் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியை வீழ்த்தி ஜார்ஜ் முன்சே தலைமையிலான கரீபியன் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.