கோலி, ரோகித் மற்றும் ஜடேஜாவை தொடர்ந்து ஓய்வா...? பும்ரா அளித்த பதில்
|ஜஸ்பிரித் பும்ரா மொத்தம் 4 ஓவர்களை வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா வெற்றி பெற பெரிதும் உதவினார்.
மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி, கோப்பையை வென்று அசத்தியது. இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தனர்.
இதனை தொடர்ந்து மும்பையில் திறந்த நிலையிலான பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் இந்திய வீரர்கள் வெற்றி பேரணியாக வலம் வந்தனர். அவர்களை காண்பதற்காக, கொட்டும் மழைக்கு இடையே லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.
மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை பேரணி நடைபெற்றது. வான்கடே மைதானத்திற்கு வீரர்கள் வந்ததும் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். மும்பையில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதன்பின் வீரர்களுக்கு ரூ.125 கோடிக்கான காசோலையை பி.சி.சி.ஐ. வழங்கியது. இந்நிலையில், கோலி, ரோகித் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஓய்வு அறிவிப்பை அடுத்து வேறு முக்கிய வீரர் யாரேனும் ஓய்வு பெறுவார்களோ என ரசிகர்கள் மத்தியில் சலலசப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பும்ராவிடம் அவருடைய முடிவு பற்றி கேட்கப்பட்டது. அப்போது வான்கடே ஸ்டேடியத்தில் பேசிய பும்ரா, ஓய்வு பெறுவதற்கான காலம் இன்னும் நீண்ட தொலைவில் உள்ளது. நான் இப்போதுதான் விளையாட தொடங்கி இருக்கிறேன். அதனால், ஓய்வு பெறுவதற்கு இன்னும் அதிக காலம் உள்ளது என கூறி ஓய்வு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
போட்டி தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் 3-வது நபராக பும்ரா வந்துள்ளார்.
இறுதி போட்டியில் வெற்றியை முடிவு செய்யும் பந்து வீச்சை ஜஸ்பிரித் பும்ரா வெளிப்படுத்தினார். தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 30 பந்துகளில் 30 ரன்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்போது மீண்டும் பும்ரா மீது நம்பிக்கை வைத்து ரோகித் பந்து வீசும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார்.
இதில், 16-வது ஓவரில் 4 ரன்களே பும்ரா விட்டு கொடுத்து சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அடுத்து, 18-வது ஓவரில் 2 ரன்களை கொடுத்ததுடன், ஜேன்சன் விக்கெட்டையும் கைப்பற்றினார். பும்ரா மொத்தம் 4 ஓவர்களை வீசி 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா வெற்றி பெற பெரிதும் உதவினார். முக்கிய வீரரான ஜேன்சனின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது. தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ரா அறிவிக்கப்பட்டார். போட்டி முடிந்ததும் அவர் அளித்த பேட்டியின்போது, பொதுவாக, ஒரு போட்டி முடிந்ததும் நான் அழுவது இல்லை. ஆனால், இந்த போட்டி முடிந்ததும் உணர்ச்சிவசப்பட்டு இரண்டு, மூன்று முறை அழுதேன் என கூறினார்.