எனது வழிகாட்டிக்கு வாழ்த்துகள் - அபிஷேக் சர்மா
|உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்ற யுவராஜ் சிங்கிற்கு அபிஷேக் சர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஹராரே,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் தனது முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி அதன் பிறகு அடுத்த 4 ஆட்டங்களிலும் வரிசையாக வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் தனதாக்கி இருக்கிறது.
முன்னதாக இந்த தொடரில் அபிஷேக் சர்மா, ரியான் பராக் போன்ற சில இளம் வீரர்கள் அறிமுக வாய்ப்பை பெற்றனர். அந்த வாய்ப்பை அபிஷேக் சர்மா அற்புதமாக பயன்படுத்தினார். ஏனெனில் முதல் போட்டியில் டக் அவுட்டான அவர், 2வது போட்டியில் 100 (47 பந்துகள்) ரன்கள் விளாசி இந்தியாவை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். குறிப்பாக 82 ரன்களில் இருந்து போது ஹாட்ரிக் சிக்சர்களுடன் அவர் சதத்தை தொட்டது பிரமிக்க வைத்தது.
இந்நிலையில் 2024 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ் தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்ற தம்முடைய குருவான யுவராஜ் சிங்கிற்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த அடுத்த நாளே 2-வது போட்டி நடைபெற்றது தான் இந்தியா கம்பேக் கொடுக்க உதவியதாகவும் அபிஷேக் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"கடந்த 2 போட்டிகளாக பிட்ச் பவுலிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. முதல் போட்டி நடந்த அடுத்த நாளே 2வது போட்டி நடைபெற்றதே கம்பேக் கொடுப்பதற்கு நேர்மறையாக அமைந்தது. ஏனெனில் 2வது நாளே போட்டி நடைபெற்றதால் தோல்வியைப் பற்றி சிந்திக்க எங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரின் போதே நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அது கனவு நிஜமான தருணமாக இருக்கும் என்று பேசினோம்.
ரியான் பராக்கும் நானும் நீண்ட காலத்திற்கு முன் பேசியது தற்போது நடந்துள்ளது. எங்களை நம்பி வாய்ப்பு கொடுத்த கேப்டன் மற்றும் பயிற்சியாளரை இங்கே குறிப்பிட விரும்புகிறோம். முதல் 2 போட்டிகளில் எனது பவுலிங் நன்றாக இல்லாததால் அதில் வேலை செய்தேன். லெஜெண்ட்ஸ் தொடரை பார்த்தோம் அது எப்போதும் சிறப்பானது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிராக பைனலில் விளையாடும்போது இன்னும் சிறப்பு. எனது வழிகாட்டியான யுவி பாஜிக்கு வாழ்த்துகள்" என்று கூறினார்.