ரோகித் சர்மா பஞ்சாப் அணிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரீத்தி ஜிந்தா
|இணையத்தில் எப்படி செய்திகள் திரிக்கப்பட்டு போலியாக வெளியாகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம் என்று பிரீத்தி ஜிந்தா கூறினார்.
மும்பை,
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அடுத்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க பிரீத்தி ஜிந்தா முயற்சி செய்கிறார் என்று இணையத்தில் செய்திகள், வதந்திகள் பரப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், இதனை பிரீத்தி ஜிந்தா மறுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"போலிச் செய்தி! இது தொடர்பாக வெளியாகும் அனைத்துச் செய்திகளுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. ரோகித் சர்மா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் அவரது தீவிர ரசிகை. நான் எந்த ஒரு நேர்காணலிலோ அல்லது இடத்திலோ இது பற்றி பேசியதில்லை.
ஷிகர் தவான் மீதும் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர் காயம் அடைந்திருக்கும்போது இப்படிப்பட்ட வதந்திகளை உருவாக்குவது நல்லது அல்ல.
இணையத்தில் எப்படி செய்திகள் திரிக்கப்பட்டு போலியாக வெளியாகின்றன என்பதற்கு இது ஓர் உதாரணம். இத்தகைய போலி செய்திகளை வெளியிட வேண்டாம் என்று அனைத்து ஊடகங்களிடமும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
எங்கள் அணி சிறந்த அணிதான். வெல்வதுதான் எங்கள் குறிக்கோள். நன்றி" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.