< Back
கிரிக்கெட்
பிளே-ஆப் சுற்றில் நுழைய இரு இடத்துக்கு 5 அணிகள் போட்டி... யாருக்கு வாய்ப்பு அதிகம்?
கிரிக்கெட்

'பிளே-ஆப்' சுற்றில் நுழைய இரு இடத்துக்கு 5 அணிகள் போட்டி... யாருக்கு வாய்ப்பு அதிகம்?

தினத்தந்தி
|
16 May 2024 10:28 AM IST

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த போட்டியில் இன்னும் 5 லீக் ஆட்டங்களே மீதி இருக்கின்றன. நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது. நேற்று முன்தினம் நடந்த டெல்லி கேப்பிட்டல்சுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வி கண்டதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 2-வது அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை அதிகாரபூர்வமாக இழந்து விட்டன.

3 அணிகள் இடையே கடும் போட்டி

அடுத்த சுற்றில் எஞ்சி இருக்கும் இரு இடங்களுக்கான வாய்ப்பில் கணக்குபடி 5 அணிகள் இருந்தாலும், இதில் ஐதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 3 அணிகள் தான் முன்னிலையில் இருக்கின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளின் அடுத்த சுற்று கனவு ஏறக்குறைய முடிந்து விட்டது. அது குறித்து இங்கு பார்க்கலாம்:-

டெல்லி கேப்பிட்டல்ஸ்:

டெல்லி அணி 14 புள்ளிகள் பெற்றிருக்கிறது. நிகர ரன் ரேட்டில் (-0.377) பின்தங்கி இருக்கும் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியும், ஐதராபாத் அணி தனது கடைசி 2 ஆட்டங்களில் அதிக ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தால் மட்டுமே அந்த அணிக்கு அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு லேசாக தென்படும்.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:

லக்னோ அணி 12 புள்ளிகளுடன் இருக்கிறது. நிகர ரன் ரேட்டில் (-0.787) பின்தங்கி இருக்கும் அந்த அணி தனது அடுத்த ஆட்டத்தில் மும்பையுடன் மோதுகிறது. இதில் லக்னோ அணி 200 ரன்கள் குவித்து, மும்பை அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டால் கூட அந்த அணியால் நிகர ரன் ரேட்டை -0.351 ஆக தான் உயர்த்த முடியும். எனவே டெல்லி அணியை போன்று லக்னோவும் வெளியேறும். அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டுமே அந்த அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டும்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்:

12 புள்ளிகளுடன் உள்ள பெங்களூரு அணி + 0.387 நிகர ரன் ரேட்டுடன் உள்ளது. அந்த அணி சென்னைக்கு எதிரான தனது கடைசி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 18.1 ஓவர்களிலும் எட்டிப்பிடித்தால் சென்னையை பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறி விட முடியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

14 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிகர ரன் ரேட் + 0.528 ஆகும். சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு சென்னை தகுதி பெறும்.

ஒருவேளை பெங்களூரு அணி 200 ரன்கள் குவித்து, சென்னை அணி 18 ரன்னுக்கு குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் பெங்களூரு அணியை விட சென்னை அணியின் நிகர ரன் ரேட் கூடுதலாக இருந்து முன்னேற முடியும். பெங்களூரு அணியிடம் பெரிய தோல்வியை சந்தித்தாலும் கூட சென்னை அணிக்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஐதராபாத் அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் தோற்க வேண்டும். அப்போது சென்னை அணியும், பெங்களூரு அணியும் ஒருசேர பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விட முடியும்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ்:

14 புள்ளிகளுடன் உள்ள ஐதராபாத் அணி + 0.406 என்ற நிகர ரன் ரேட்டில் இருக்கிறது. ஐதராபாத் அணிக்கு இன்னும் ஒரு புள்ளி கிடைத்தாலே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஐதராபாத் தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் தோல்வி கண்டால், சென்னை அணி பெங்களூருவை வீழ்த்துமா? என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். மாறாக பெங்களூரு அணி, சென்னையை வென்றால் ஐதராபாத் அணிக்கு நெருக்கடி ஏற்படும். இந்த நிலை ஏற்படும் போது சென்னை அணியின் நிகர ரன்-ரேட் ஐதராபாத் அணியை விட குறைவாக இருந்தால் மட்டுமே ஐதராபாத் அணி அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க முடியும்.

மேலும் செய்திகள்