கோவை கிங்ஸ் அசத்தல் பந்துவீச்சு...சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 126 ரன்கள் சேர்ப்பு...!
|இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகள் ஆடி வருகின்றன.
திண்டுக்கல்,
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.
இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் ஆகிய அணிகள் ஆடி வருகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் ரஞ்சன் பால் ஆகியோர் களம் இறங்கினர்.
இதில் ஜெகதீசன் 4 ரன்னிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 6 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய சந்தோஷ் ஷிவ் 14 ரன்னும், பாபா அபராஜித் 12 ரன்னும், சஞ்சய் யாதவ் 2 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் சேப்பாக் அணி 61 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து களம் இறங்கிய சசிதேவ் மற்றும் ஹரிஷ் குமார் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ஹரிஷ் குமார் மொஹமதின் ஒவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார்.
அதிரடியாக ஆடிய ஹரிஷ் குமார் 32 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சசிதேவ் 23 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணி ஆட உள்ளது.