கிளாசன் அதிரடி சதம்... இங்கிலாந்துக்கு 400 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா.!
|தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்துள்ளது.
மும்பை,
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெற்றுவரும் 20-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.
உடல்நலக்குறைவு காரணமாக கேப்டன் பவுமா இந்த ஆட்டத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதில் மார்க்ரம் கேப்டனாக செயல்படுகிறர். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும், ஹெண்ட்ரிக்ஸ்சும் களமிறங்கினர்.
டி காக் முதல் ஓவரிலேயே அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். எனினும், ஹெண்ட்ரிக்ஸ்- வான் டர் டசன் ஜோடி, இரண்டாவது விக்கெட்டுக்கு நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்த நிலையில், வான் டர் டசன் 60 ரன்களிலும், ஹெண்ட்ரிக்ஸ் 85 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மார்க்ரம் தன் பங்குக்கு 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிவந்த கிளாசன், அரைசதம் கடந்த பின்னர் ருத்ர தாண்டவமாடினார். பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு விரட்டிய அவர், சதம் அடித்து அசத்தினார். அவர் 67 பந்துகளில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம், கிளாசனுக்கு இணையாக மார்கோ யான்செனும் அதிரடி காட்டினார். அவர் 42 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் டாப்லி 3 விக்கெட்டுகளும், ரஷித், அட்கின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது.