< Back
கிரிக்கெட்
தலைமை பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் - பி.சி.சி.ஐ.க்கு கங்குலி கோரிக்கை
கிரிக்கெட்

தலைமை பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் - பி.சி.சி.ஐ.க்கு கங்குலி கோரிக்கை

தினத்தந்தி
|
30 May 2024 3:59 PM IST

இந்திய அணியின் பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று பி.சி.சி.ஐ.க்கு சவுரவ் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனையடுத்து புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலையை பிசிசிஐ தொடங்கியது. இதற்காக பி.சி.சி.ஐ., கவுதம் கம்பீர், விவிஎஸ் லக்ஷ்மன், ஆசிஸ் நெஹ்ரா போன்ற இந்திய முன்னாள் வீரர்களை அணுகியதாக செய்திகள் வெளியானது.

இவர்களில், கவுதம் கம்பீர், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 10 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்வதற்கு ஆலோசகராக செயல்பட்டு முக்கிய பங்காற்றினார். அத்துடன் 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் வீரராகவும் பயிற்சியாளராகவும் மிகப்பெரிய அனுபவத்தை கொண்டுள்ளார். எனவே அவரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ அணுகியதாக செய்திகள் வந்தன.

ஐபிஎல் கோப்பையை வென்றதும் அவரிடம் சென்னையில் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அதனால் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும் என்று பி.சி.சி.ஐ.-க்கு சவுரவ் கங்குலி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு:- "ஒருவரின் வாழ்க்கையில் பயிற்சியாளரின் முக்கியத்துவம், அவரின் வழிகாட்டுதல் மற்றும் இடைவிடாத பயிற்சி ஆகியவை எந்தவொரு நபரின் எதிர்காலத்தையும், களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வடிவமைக்கின்றன. எனவே பயிற்சியாளர் மற்றும் நிறுவனத்தை புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும்" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்